கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Saturday, May 17, 2025

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் - நாமல் ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநகர சபையை எதிர்க்கட்சியில் யாராவது ஆட்சி அமைக்க முன்வந்தால் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எங்களுக்கு எந்த தேவையும் இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மையான சபைகளை வெற்றி கொள்ள முடியுமாகி இருக்கின்றபோதும் 180 க்கும் அதிகமான சபைகளில் தனித்து ஆட்சியமைக்க அவர்களிடம் பெரும்பான்மை இல்லை. அதனால் அவர்கள் ஆட்சியமைப்பதாக இருந்தால் ஏனைய எதிர்க்கட்சிகளின் அல்லது சுயாதீன குழுக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை அரசாங்கத்துக்கு 48 ஆசனங்களே கிடைக்கப் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கே பெரும்பான்மை இருக்கிறது. எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிக ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அடுத்தபடியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக எங்களுக்கு 5 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் கொழும்பு மாநகர சபையை ஆட்சி செய்வதற்கு பூரண அதிகாரம் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.

அதன் பிரகாரம் கொழும்பு மாநகர சபைக்கு எதிர்க்கட்சியில் இருந்து மேயர் ஒருவர் பெயரிடப்பட்டால் அதற்காக நாங்கள் எமது ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

அதேபோன்று ஏனைய சபைகளிலும் மக்களின் தீர்மானத்துக்கு அமைய எதிர்க்கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியுமான சபைகளில், எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படும் தலைவருக்கு நாங்கள் ஆதரவளிப்போம். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க எங்களுக்கு எந்த தேவையும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment