(செ.சுபதர்ஷனி)
நாட்டில் உள்ள வயது வந்தவர்களில் மூன்றில் ஒரு பிரிவினர் உயர்குருதி அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 50 சதவீதமானோர் தமக்கு நோய் உள்ளது என்பதை அறியாமலேயே வாழ்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச உயர்குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது கலந்துகொண்ட தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் பணிமனையின் சமூக வைத்திய நிபுணர் ஷிலாந்தி மெத்தானந்த குறிப்பிடுகையில்,
பொதுமக்களிடையே உயர்குருதி அழுத்தம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், மே மாதம் 17 ஆம் திகதி சர்வதேச உயர்குருதி அழுத்த தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன், இவ்வருடம் “குருதியழுத்தத்தை உரியவாறு அளவிட்டு, அதை கட்டுப்படுத்தி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வோம்” எனும் விசேட தொனிப்பொருளுக்கமைய உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட உள்ளது.
நாட்டில் உள்ள வயது வந்தவர்களில் மூன்றில் ஒரு பிரிவினர் உயர்குருதியழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 50 வீதமானோர் தமக்கு நோய் உள்ளது என்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்.
பாரிசவாதம், இதய செயலிழப்பு, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், சிறுநீரகம் பழுதடைதல், பார்வை குறைபாடு உள்ளிட்ட பல தொற்றா நோய்களை ஏற்படுத்தும் பிரதான நோய் காரணியாக உயர்குருதி அழுத்தம் காணப்படுகிறது.
அடையாளம் காணப்பட்டுள்ள உயர்குருதி அழுத்த நோயாளர்களில் மூன்றில் ஒரு பிரிவினருக்கு மாத்திரமே நோய் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் 35 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குருதி அழுத்த பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என்றார்.
இதேவேளை களணி பல்கலைக்கழக மருத்துவ பீட மருந்தியல் தொடர்பான பேராசிரியர் சமிலா மெத்தானந்த தெரிவிக்கையில், உயர்குருதி அழுத்தம் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தாது மனிதர்களை மெல்ல மெல்ல மரணத்தின் வாசலுக்கு அழைத்துச் செல்ல வல்லது.
மாறிவரும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் காரணமாக உயர்குருதி அழுத்தம் ஏற்படுகிறது. உடல் பருமனானவர்கள், நீரிழிவு நோயாளர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் புரிபவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உயர்குருதி அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சோடியம் அடங்கிய உப்பை உணவுக்கு பயன்படுத்தும்போது அதன் அளவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள்.
ஆரோக்கியமாக வாழ மனிதன் ஒருவனுக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பை மாத்திரம் பயன்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுருத்தியுள்ளது. எனினும் இலங்கையில் உள்ள மக்கள் நாளாந்தம் 13 கிராம் உப்பை பயன்படுத்துகின்றனர். இதனால் உயர்குருதி அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொட்டாசியம் உப்பு உள்ள பழங்கள், காய்கறிகள் உட்கொள்வது நல்லது என்றார்.
No comments:
Post a Comment