முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு வரையான 3 வருட காலப்பகுதியில் 23 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக சுமார் ரூ. 100 கோடி வரையிலான அரச நிதியை செலவிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்ர எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமது கேள்வியின்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022, 2023, 2024ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் அதற்கான செலவினங்கள் தொடர்பில் வினவினார்.
அந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022ஆம் ஆண்டு 4 வெளிநாட்டுப் பயணங்கள், 2023ஆம் ஆண்டு 14 வெளிநாட்டுப் பயணங்கள், 2024ஆம் ஆண்டு 5 வெளிநாட்டுப் பயணங்கள் என 3 ஆண்டுகளுக்குள் 23 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது அவருடன் பலர் அரசமுறை விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.
2022ஆம் ஆண்டு 63 பேர், 2023 ஆம் ஆண்டு 252 பேர், 2024ஆம் ஆண்டு 111 பேர் என்ற அடிப்படையில் இக்காலப்பகுதியில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்க செலவில் 436 பேர் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட அரசமுறை பயணத்துக்காக ரூ.129 மில்லியன், 2023ஆம் ஆண்டு ரூ. 577 மில்லியன், 2024ஆம் ஆண்டு ரூ. 300 மில்லியன் என்ற அடிப்படையில் ரூ. 100 கோடி அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் குழு 19 அரசமுறை பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன் அந்த பயணங்களுக்காக ரூ. 100 கோடி ரூபா அரசாங்கத்தின் நிதி செலவிடப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment