கட்டுநாயக்க, ஆண்டியம்பலம், தெவமொட்டாவ பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் சென்று அவருடன் பேசியவாறு உள்ளே நுழைந்துள்ளார்.
இதன்போது யாருடனோ தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு உரையாடிக் கொண்டிருந்து குறித்த வர்த்தகர் மீது, அவர்களில ஒருவர் தனது கைப்பையினுள் இருந்த கைத்துப்பாக்கியால் சுட முனைந்துள்ளார்.
இச்சம்பவத்தின்போது, கைத்துப்பாக்கி சரியாக இயங்கவில்லை என்பதுடன், சுதாரித்துக் கொண்ட குறித்த வர்த்தகர் குறித்த நபருடன் மல்லுக்கு நின்றுள்ளார்.
இதன்போது மற்றைய சந்தேகநநபரும் தனது கைப்பையிலிருந்த துப்பாக்கியால் சுட முயற்சி செய்த போதிலும் அம்முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வர்த்தகர் அறையொன்றிற்குள் ஓடி நுழைவதோடு, சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி, வீட்டின் எல்லைச் சுவரைத் தாண்டி குதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் எல்லைச் சுவரிலிருந்து தவறி வீழ்ந்து எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது அவர் தம் வசம் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அங்கு கூடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரை சுற்றி வளைத்த பிரதேசவாசிகள் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வளைத்துப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment