உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்க சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் 4 பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
குறித்த குழுவின் உறுப்பினர்கள்
அசங்க கரவிட்ட - CID/ FCID
பிரதிப் பொலிஸ்மா அதிபர் - CID
பணிப்பாளர் - CID
பணிப்பாளர் - TID (பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி அறிவுறுத்தலின் கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து தொகுதிகளும் ஏப்ரல் 20ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த குழுவினால் பல துணைக் குழுக்கள் நிறுவப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் வெளிவரும் புதிய விடயங்களின் அடிப்படையில், புதிய விசாரணைகள் ஆரம்பிக்ககப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த விசாரணை அறிக்கை சுமார் 66,000 முதல் 67,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், நியமிக்கப்பட்ட குழுக்கள் தற்போது அறிக்கையை பகுப்பாய்வு செய்து வருவதாகவும், தொடர்புடைய விசாரணைகள் மிக விரைவாக ஆரம்பிக்ககப்படும் என்றும் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இவற்றுக்கு பொறுப்பான நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment