தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி : மூவரடங்கிய நீதிபதி குழாமுக்கு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 22, 2025

தரமற்ற தடுப்பூசிகள் இறக்குமதி : மூவரடங்கிய நீதிபதி குழாமுக்கு கோரிக்கை

தரமற்ற ஹியூமன் இமினோகுளோபியுலின் (Human Immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்க, மூவரடங்கி நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பேருக்கு எதிராக குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதித்துறை திருத்தச் சட்டத்தின் கீழ் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்லவும் பல சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குகுமூலம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் கெஹெலிய ரம்புக்வெல்ல 2024 பெப்ரவரியில் சிஐடி அவரைக் கைது செய்திருந்தது.

குறித்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெஹலெியவின் கைதுக்கு முன்னதாக, மருந்து கொள்வனவு மோசடி தொடர்பாக ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 2023 ஒக்டோபரில், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) வெளியிட்ட அறிக்கையின்படி, ஹியூமன் இமினோகுளோபியுலின் உள்ளடக்கிய ஒரு தொகுதி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ய போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. 

இந்த மருந்துகள் பின்னர் தரச் சோதனைகளில் தோல்வியடைந்தன. இந்த மருந்து, இரத்த பிளாஸ்மா கலங்களால் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் அன்டிபொடியாகும்.

இந்த மோசடி தொடர்பாக, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவு தொழிற்சங்கங்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2024 பெப்ரவரி 02 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கெஹெலிய ரம்புக்வெல்லவை கைது செய்தது.

கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், குறித்த மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்ததாகவும், இதற்கு போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 130 மில்லியன் நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மருத்துவ விநியோக பிரிவின் முன்னாள் பணிப்பாளர், தரமற்ற மருந்துகளை வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜனக பெர்னாண்டோ உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 7 மாதங்களின் பின்னர் 2024 செப்டம்பர் 11ஆம் திகதி, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 3 பேர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு, அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment