நேற்றிரவு (22) வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் என தெரிவிக்கப்படும் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 9.10 மணியளவில் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த டேன் பிரியசாத் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் வசிக்கும் 39 வயதான டேன் பிரியசாத் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவத்திற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மரணமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க ஆரம்பத்தில் தெரிவித்த போதிலும், பின்னர் அவர் தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment