காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் அம்பியூலன்ஸ் வண்டிகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சூடு நடத்தி 15 உதவிப் பணியாளர்களை கொன்றதை உறுதி செய்யும் வீடியோ ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி காசாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 மருத்துவ மற்றும் உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மற்றும் பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்தது.
எனினும் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களில் பயங்கரவாதிகள் அணுகியதாலேயே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் அப்போது விளக்கமளித்திருந்தது.
இந்நிலையில் பலஸ்தீன செம்பிறை சங்கம் கடந்த சனிக்கிழமை (05) வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரத்தில் இஸ்ரேல் இராணுவம் கூறியதற்கு முரணாக விளக்குகளை ஒளிரச் செய்துகொண்டு சென்ற அம்பியூலன்ஸ் வண்டிகள் மீது இஸ்ரேல் சூடு நடத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆறு நிமிடம் மற்றும் 42 விநாடிகளைக் கொண்ட அந்த வீடியோ ஓடும் வாகனத்திற்குள் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வாகனங்கள் மீது சூடு நடத்தப்படுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட உதவிப் பணியாளரான ரிபாத் ரத்வானின் கைபேசியில் இருந்து இந்த வீடியோ பெற்றபட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக விளக்குகளை போடாமல் இருளில் வந்த அடையாளம் தெரியாத வாகனங்கள் மீதே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருந்தது.
‘இந்த வீடியோ உண்மையை வெளிப்படுத்துவதோடு பொய்யான விளக்கத்தை முறியடித்துள்ளது’ என்று செம்பிறை சங்கம் கூறியது.
ஆக்கரமிப்பாளர்களின் கோடூரத்தின் ஓர் ஆதாரமாக இந்த வீடியோ உள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில் திரை இருண்ட பின்னர் ஒருவர், மரணத்தின்போது கூறும் இஸ்லாமிய நம்பிக்கை பிரகடனத்தை கூறுவது பதிவாகி உள்ளது. வீடியோ முடிவதற்கு சற்று முன்னர் இஸ்ரேலிய படையினரை குறிப்பிடும் வகையில் ‘யூதர்கள் வருகிறாரர்கள், யூதர்கள் வருகிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலஸ்தீன செம்பிறை சங்கத்தின் எட்டு பணியாளர்கள், காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்கள் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஒரு ஊழியர் அடங்குகின்றனர்.
ராபவுக்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில் இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனை பாரிய மனிதப் புதைகுழி என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அலுவலகம் விபரித்திருந்தது.
இந்நிலையில் படையினர் தவறு செய்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்த நிலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று செம்பிறை சங்கம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 46 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் நேற்று உக்கிரம் அடைந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கான் யூனிஸ் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற குண்டு வீச்சில் இளம் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது. தவிர அந்த நகரின் பண்ணை வீடு ஒன்றின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கான் யூனிஸில் நேற்று அதிகாலை தொடக்கம் குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய படை நடத்திய வான் தாக்குதல்களில் 9 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் மீட்பாளர்கள் தொடர்ந்து தேடுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தெற்கு காசாவில் புதிய இராணுவ தாழ்வாரம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் 2005 இல் வெளியேற்றப்பட்ட சட்டவிரோத குடியேற்றப் பகுதியின் பெயரைக் கொண்ட ‘மொரான் தாழ்வாரம்’ ராபா நகரை காசாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து துண்டிப்பதாக அமையவுள்ளது.
காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்து புதிய நிலங்களை கைப்பற்றி வரும் நிலையில் பலஸ்தீனர்கள் கான் யூனிஸ் மற்றும் டெயிர் அல் பலாஹ் பகுதிக்குள் முடக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் போர் நிறுத்தம் முறிந்து கடந்த மார்ச் 18 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகமாக உள்ளனர்
No comments:
Post a Comment