திஸ்ஸ விகாரை பிரச்சனையில் இருப்பது இனவாதம். இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். தற்போது உள்ள சட்டங்கள் இனவாதத்தை ஒழிக்க போதாது. சட்டங்களை புதிதாக உருவாக்கி இனவாதத்தை களைவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”எமது பரம்பரை யுத்தம் செய்தது. ஆனால் அடுத்த பிள்ளைகளின் பரம்பரைக்கும் அதனை விடமாட்டோம். பிரிவினை வாத அரசியல் முடிவிற்கு வந்தது. இழந்த ஒற்றுமையை நிச்சயம் கட்டி எழுப்புவோம். இனவாதத்தை இல்லாமல் செய்து தேசிய ஒற்றுமையை வளர்ப்போம்.
வடக்கில் பல இடங்கள் போரால் பாதிக்கப்பட்டது. வீடுகளை இழந்தனர். பாதைகளை இழந்தனர். தாய்மார்கள் பிள்ளைகளையும், கணவர்களை மனைவிமாரும் இழந்தார்கள். நண்பர்களை இழந்தனர். கவலையான பாரிய ஒரு நிலமை தான் இருந்தது. அதுதான் யுத்தம். தற்போது போர் முடிந்து 16 வருடங்கள் கழிந்துள்ளது. இன்னும் அதன் மிச்ச சொற்பங்கள் இருக்கின்றன.
யாழில் திஸ்ஸவிகாரை தொடர்பாக ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்ன பிரச்சனை?. அந்த காணிகளின் உரிமையாளர்களும், பன்சாலையின் பிக்குமாருக்கும் அந்த பிரச்சனையை தீர்க்க இடமளித்தால் அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். தீர்க்க இடமளிக்காமல் இருப்பது அரசியல். அவர்களுக்கு தேவை இதனூடாக இனவாதத்தை தூண்டுவது. இதன் காரணமாகவே தீர்க்க முடியாமல் உள்ளது.
வடக்கின் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அந்த இடத்திலே ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்த முனைகின்றனர். தென் பகுதியில் தோல்வி கண்ட அரசியல் தலைவர்கள் அங்கே ஒரு முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள். நாங்கள் காணி உரிமையாளர்கள், பிக்குமார்கள் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவோம். இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். தற்போது உள்ள சட்டங்கள் இனவாதத்தை ஒழிக்க போதாது. சட்டங்களை புதிதாக உருவாக்கியாவது இனவாதத்தை களைவோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும். தமிழ் பேசும் திறமையானவர்களை இலங்கை கிரிக்கெட் அணியில் இணைக்க வேண்டும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து இருந்து அந்த இடத்தில் விளையாடும் இலங்கை அணியை ஊக்கிவிக்க வேண்டும். அதனை நாம் ஏற்படுத்துவோம்.
தேர்தல் காலங்களின் போது தேர்தல் அலுவலகங்களை தீயிட்டு எரித்தமை தொடர்பாக நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் யாழில் நூலகத்தை எரித்தார்கள். உலகில் எங்கும் அப்படி நடக்கவில்லை. நாங்கள் அதற்கு 10 கோடிகள் ஒதுக்கியுள்ளோம்.
போரின் பின்னர் கூகுள் வரைபடத்தை பார்த்தே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை எடுத்தார்கள். அந்த காணிகளை நேரடியாக சென்று பார்த்து அதனை அளந்து எடுக்கவில்லை. காடாக இருக்கும் காணிகளை பார்த்தார்கள் எடுத்தார்கள். மக்களின் காணிகள் அதற்குள்ளே இருக்கிறது. விவசாய காணிகள் உள்ளது. குளங்கள் உள்ளது. எனவே மீண்டும் அதனை ஆய்வு செய்து அனைத்து காணிகளும் இந்த மக்களுக்கு பெற்றுக் கொடுப்போம்.
நெற் களஞ்சியசாலைகள் பல உள்ளது. நெல் கொள்வனவுக்காக நாங்கள் 500 கோடிகள் வழங்கினோம். ஒரு விலையையும் நிர்ணயித்தோம். அந்தவிலையை விட குறைந்தால் எங்களுக்கு தாருங்கள். விலை கூடினால் தனியாருக்கு வழங்குங்கள் பரவாயில்லை. நெல் விலை குறைந்தால் அரசு கொள்வனவு செய்யும். கூடினால் அவர்கள் எடுப்பார்கள். அந்த முறையை நாங்கள் செய்தோம். இந்த போகத்தில் நெல் விலை குறைந்ததா. இனி ஒரு போதும் நெல் விலை குறையாது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி ஒரு மாற்றம் வரும் என அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதி என்பது பரம்பரையான ஒன்று என இருந்தார்கள். தந்தை, மகன், பேரன் என போட்டியிட்டார்கள். பதவியில் இருந்தார்கள். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்புதேகமவில் இருந் ஒரு மக்கள் சார்ந்தவன் வந்துள்ளான். உண்மை தானே. இதை பலரும் எதிர்பார்க்கவில்லை. குழம்பி போயுள்ளார்கள்.
2000 பொலிசாருக்கு வெற்றிடங்கள் உள்ளன. அதில் தமிழ் மொழி பேசும் பொலிசாரை அதிகமாக உள்வாங்க உள்ளோம். குறைந்தது 500 பேராவது தமிழ் பேசுபவர்கள் இணைய வேண்டும். ஆனால் பொலிஸ் சேவையில் இணைய தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால் அது நல்ல தொழில் தானே. நீதியுடன் தொடர்புடையது. நல்ல சம்பளம் வரும். எனவே தமிழ் இளைஞர், யுவதிகள் அதில் இணைய வேண்டும். நாடும் பூராகவும் 30 ஆயிரம் அரச நியமன்களையும் வழங்குவோம். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும.
ஜனாதிபதி தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளை வழங்கினார்கள். தற்போது உள்ளுராட்சி சபைகளை சுத்தம் செய்ய தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment