நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் வத்திக்கான் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி மு.ப. 10.00 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் (St. Peter’s Square) இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசரின் திருவுடலின் புகைப்படத்தையும் வத்திக்கான் தற்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் பெரல் (Kevin Farrell) நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாக உயிர் நீத்ததாக வத்திக்கான் திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வத்திக்கான் மருத்துவர் அண்ட்ரியா அர்க்காங்கெலி உத்தியோகபூர்வமாக வெளியிட்ட இறப்புச் சான்றிதழை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் இறைச் சேவையாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிலுள்ள இல்லத்தில் நேற்று (21) இறைபதமடைந்தார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு உலக நாட்டு தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment