புதிய வரி தொடர்பில் அரசாங்கம் மந்தகரமாக செயற்படுகிறது : தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு வீதிக்கு இறக்கமாட்டோம் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 9, 2025

புதிய வரி தொடர்பில் அரசாங்கம் மந்தகரமாக செயற்படுகிறது : தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு வீதிக்கு இறக்கமாட்டோம் - நாமல் ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் மந்தகரமாக செயற்படுகிறது. வரி விதிக்கப்பட்டதன் பின்னர்தான் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற சேர் பெறுமதி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தீர்வை வரி உலகளாவிய ரீதியில் தற்போதைய பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது. இலங்கையின் சேவை மற்றும் இதர துறைகளும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியம் காணப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையினால் பெரும்பாலான வலய நாடுகள் திறந்த பொருளாதார கொள்கைக்கு அப்பாற்பட்டு செயற்பட உத்தேசித்துள்ளன. நாடு என்ற ரீதியில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்வது என்பது அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள 44 சதவீத தீர்வை வரியை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை தொடர்பில் பெரும்பாலான நாடுகள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்தே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால் இங்கு வரி விதிக்கப்பட்டதன் பின்னரே அரசாங்கம் குழு அமைத்து ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நெருக்கடியான நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துiழைப்பு வழங்குவோம்.

தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு வீதிக்கு இறக்கி மக்களை நெருக்கடிக்குள்ளாக்கமாட்டோம். பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு அமெரிக்காவின் தீர்மானத்தை முகாமைத்துவம் செய்வது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பணிகளை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் தொடர்பில் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. மே மாதம் 06 ஆம் திகதி எந்த பிரதேச சபைக்கு தேர்தல் நடைபெறும் என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment