கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட ஒரு சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்தததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு மாநகர சபை, ஹரிஸ்பத்துவ, பன்வில, பாத்ததும்பர, உட பலாத மற்றும் குளியாபிட்டிய பிரதேச சபைகளில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் இந்த உத்தரவின் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, மே 06 இல் திகதியிடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விதித்துள்ளது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணைகளை மே 16ஆம் திகதி எடுத்துக்கொள்ளவும், அன்றையதினம் தினம் வரை மேற்படி உத்தரவு அமுலில் இருக்குமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேவளை, குறித்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 05ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறும், மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 07ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதியரசர்கள் குழாம் இன்றையதினம் (07) உத்தரவிட்டுள்ளது.
உரிய நேரத்திற்குள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனும் அடிப்படையில், அந்தந்த தேர்தல் அதிகாரிகள் தங்கள் வேட்புமனுக்களை நிராகரிக்க எடுத்த முடிவுகள் சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு கோரி, ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment