இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்பீட் கன்” - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 5, 2025

இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய “ஸ்பீட் கன்”

(எம்.வை.எம்.சியாம்)

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் (Speed Guns ) உபகரணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் இந்த உபகரணத்தை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் எனவும் இதன்போது பதிவு செய்யப்படும் காணொளியை நீதிமன்றத்தில் வழக்கின்போது சாட்சியமாக பயன்படுத்த முடியும் எனவும் வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரனகல தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. வீதி விபத்துக்கள் ஏற்பட பிரதான காரணம் அதிக வேகமாகும். எனவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்பீட் கன் Speed Guns பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் நாட்டில் இவ்வாறான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இவை அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் இந்த உபகரணத்தை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும். 1200 கிலோ மீட்டர் தூரத்தில் வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை இதன் மூலம் கண்டறியலாம். இதன்போது பதிவு செய்யப்படும் காணொளியை நீதிமன்றத்தில் வழக்கின்போது சான்றாக பயன்படுத்த முடியும்.

இதன் மூலம் வாகனம் செலுத்தப்பட்ட வேகம் சாரதியின் புகைப்படம் மற்றும் வாகனங்களின் இலக்கத் தகடுகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். எனவே தவறிழைக்கும் தரப்பினர் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது.

தற்போது 30 ஸ்பீட் கன்கள் (Speed Guns) பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை அதிக வீதி விபத்துக்கள் பதிவாகும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் 15 உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஒட்டு மொத்தமாக 45 பொலிஸ் போக்குவரத்து பிரிவுகளுக்கு இவை வழங்கப்படவுள்ளன. இந்த உபகரணம் ஒன்றுக்கான அரசாங்கத்தினால் 33 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment