(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தோட்டப்புற மக்கள் தொழிலாளர்களாக அன்றி பங்காளிகளாக மாற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு. மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளோம். மலையக அரசியல் தலைமைகள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றம்சாட்ட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட, பின்தள்ளப்பட்ட மக்களாகவே எமது மலையக மக்கள் உள்ளார்கள். மலையக மக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் தோட்டங்களில் வசிக்கவில்லை. 8 இலட்சம் பேரே தோட்டங்களில் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கொழும்பு போன்ற பகுதிளில் வசிக்கின்றனர்.
அத்துடன் இரண்டு இலட்சம் வரையிலான குடும்பங்கள் தோட்டங்களில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தோட்டங்களில் வேலை செய்யவில்லை.
இந்த அரசாங்கத்தில் மலையக மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர் ஆகியோர் உள்ளனர். இது நல்ல விடயமே.
ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு எமது ஆதரவை வழங்குவதாக கூறுகின்றோம். ஆனால் நீங்கள் அரசாங்கம் என்ற எண்ணத்தில் இருந்தே நடந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சி என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. உங்களிடம் அதிகாரம் உள்ளது. வேலையை செய்ய வேண்டும்.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் பெருந்தோட்டத் திட்டத்தில் 7 பேர்ச்சர்ஸ் கோரிக்கையை வென்றோம். அதில் இந்தியாவின் உதவியில் வீடமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டோம். புதிய கிராமங்களை அமைத்தோம். தனி வீடுகளை அமைத்துக் கொடுத்தோம். மாடி வீடுகளை அமைப்போம் என்று சிலர் கேட்டனர். ஆனால் அந்த நில அமைப்புக்கு மாடி வீட்டை அமைக்க முடியாது.
நாங்கள் தனி வீடுகளை அமைத்து புதிய கிராமங்களாக உருவாக்கினோம். அத்துடன் ஒரே நேரத்தில் 6 பிரதேச சபைகளை உருவாக்கினோம். நாங்கள் வேலை செய்யவில்லை என்று கூறுபவர்கள் இதனை தெரிந்து கொள்ளுங்கள்.
அத்துடன் 300 தோட்டப்புற பாடசாலைகளில் அருகில் உள்ள காணிகளை பெற்று மைதானங்கள் உள்ளிட்டவை அமைக்க சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆகவே மலையக அரசியல் தலைமைகள் மற்றும் அரசியல்வாதிகள் ஏதும் செய்யவில்லை என்று வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்காதீர்கள்.
நாங்கள் ஒதுக்கப்பட்ட துன்பத்தில் உள்ள மக்கள் தொடர்பாகவே பேசுகின்றோம். இந்த விடயத்தில் எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்த மக்களுக்காக உங்களுடன் பணியாற்ற தயார். இருக்கும் இடத்தில் இருந்து அதனை செய்வோம். ஆனால் நீங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதை போன்று கூற வேண்டாம்.
நாங்கள் தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டோம்.
அதாவது தோட்டப்புற மக்கள் தொழிலாளி அல்ல பங்காளராக மாற வேண்டும் என்பதே அது. சம்பளத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர்களின் வாழ்க்கை மாறப்போவதில்லை. அவர்கள் பங்காளர்களாக இருக்க வேண்டும்.
அவர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் அதற்கு முதலாளிகள் இணங்கப்போவதில்லை. இப்போது நீங்கள் வேலை செய்து காட்டுங்கள். நாங்கள் செய்த வேலைத்திட்டங்களை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள் என்றார்.
No comments:
Post a Comment