அரசாங்கத்துக்கு இலாபமான சம்பவங்கள் மாத்திரமின்றி அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுங்கள் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Friday, March 14, 2025

அரசாங்கத்துக்கு இலாபமான சம்பவங்கள் மாத்திரமின்றி அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகளை முன்னெடுங்கள் - மனோ கணேசன்

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்துக்கு அரசியல் இலாபம் கிடைக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி மாத்திரமின்றி அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ரணில் விக்கிரமசிங்கவிடமும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் மாத்திரமின்றி ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், படலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் வழக்கு தொடரப்பட வேண்டும். அங்கு இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய வேண்டும். எனினும் படலந்த வதை முகாம் பற்றி மாத்திரம் ஏன் விசாரிக்க வேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

1948ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர்களுக்கெதிரான குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை, இறுதி யுத்தத்தின்போது தமிழர்கள் கொல்லப்பட்டமை, குடும்பத்தோடு சென்று இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், கொழும்பில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் என்பன தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை மாத்திரமின்றி சர்வதேச அளவில் பேசப்பட்ட இனப் படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எனவே படலந்த விவகாரம் தொடர்பில் மாத்திரமின்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு அரசியல் இலாபம் கிடைக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி மாத்திரமின்றி அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாதமோ அல்லது அரச பயங்கரவாதமோ இருக்கக்கூடாது. விசாரணைகளுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுவான விசாரணை ஆணைக்குழுவை நியமித்து ரணிலை மாத்திரமின்றி தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை மாத்திரமின்றி ஜே.வி.பி.யினரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment