(இராஜதுரை ஹஷான்)
எமது அரசாங்கத்தில் முன்னாள் பிரதம நீதியரசரை பாராளுமன்ற அதிகாரத்தின் ஊடாக பதவி நீக்கியது தவறு என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன். அந்த தவறின் பெறுபேற்றை நன்கு எதிர்கொண்டோம். அதே தவறை இந்த அரசாங்கமும் செய்யக்கூடாது. பொலிஸ்மா அதிபர் மீது இந்த அரசாங்கத்துக்கு தனிப்பட்ட பகைமை உள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) வழக்கு விசாரணைக்கு முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, எமக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்துக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கும்போது முன்னிலையாகுவேன். இந்த நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பு சுயாதீனமானது. அந்த சுயாதீனத்தின் ஊடாக எமக்கான நீதியை பெற்றுக்கொள்ளும் உரிமை எமக்கு உண்டு.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளோம். நாட்டில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது இந்த அரசாங்கத்துக்கு தனிப்பட்ட பகைமை உள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. நீதிமன்ற கட்டமைப்பில் உள்ளவர்கள் மீதும் இந்த அரசாங்கத்துக்கு தனிப்பட்ட பகை உள்ளது.
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் அதற்கு சட்டத்தின் ஊடாக தீர்வு காண முடியும். பொலிஸ்மா அதிபர் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டும் ஜனாதிபதியால் செயற்பட முடியும்.
பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குவது குறித்து விசேட குழு நியமிக்கப்பட வேண்டும். அந்த குழு முன்வைக்கும் பரிந்துரைகளை முழுமையாக பரிசீலனை செய்ததன் பின்னரே கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் தீர்மானம் எடுப்போம்.
கடந்த காலங்களில் அரச அதிகாரிகள் குறித்து நாங்கள் எடுத்த தீர்மானம் தவறு. அந்த தவறின் பிரதிலனை கட்சி என்ற ரீதியில் இன்றும் எதிர்கொள்கிறோம். அரச அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பாராளுமன்ற பலத்தை பயன்படுத்தும் செயற்பாடுகளுக்கு நாங்கள் இனியொருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை.
முன்னாள் பிரதம நீதியரசரை பாராளுமன்ற அதிகாரத்தின் ஊடாக பதவி நீக்கியது தவறு என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன். அந்த தவறின் பெறுபேற்றை நன்கு எதிர்கொண்டோம். அதே தவறை இந்த அரசாங்கமும் செய்யக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment