சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி : பொதுமக்கள் நலன்கருதி சுகாதார அமைச்சு தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 27, 2025

சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி : பொதுமக்கள் நலன்கருதி சுகாதார அமைச்சு தீர்மானம்

(செ.சுபதர்ஷனி)

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன்கருதி நாட்டில் உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார்.

தைரொய்ட் விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தொற்றுநோயியல் பிரிவு செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த தைரொய்ட் காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய, முன்னுரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கடந்த காலங்களில் தைரொய்ட் தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப் பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தைரொய்ட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடிவதுடன் ஏனையோருக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகிறது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், சன நெரிசலான இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்தல், விற்பனை, விநியோகம் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

தைரொய்ட் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment