(இராஜதுரை ஹஷான்)
தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக்கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவ பிரதானிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமானதுடன், நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்திக்குரியததென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சர்வஜன கட்சிக் காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானிய அரசாங்கம் தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக்கொண்டு இலங்கையின் பாதுகாப்பு பிரதானிகள் (முன்னாள்) மூவருக்கு எதிராக தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி காலதாமதமான நிலையில்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனை புதிதாகக் குறிப்பிட வேண்டிய தேவையில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் கூட்டு அறிவிப்பை விடுப்பதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிடவில்லை.
பிரித்தானியாவின் இந்த ஒருதலைப்பட்சமான தீர்மானத்தால் இலங்கையின் நல்லிணக்கத்துக்கும், அதன் வகிபாகத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளமை உண்மையானது.
இலங்கை இராணுவத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் தடைகள் விதிக்கப்படும்போது அரசாங்கம் கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்தோம்.
முப்படைகளின் தளபதியான நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நாட்டுக்காகவே இராணுவத்தினர் யுத்தக் களத்துக்கு சென்றார்கள். எவரும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக செல்லவில்லை. ஆகவே இராணுவத்தினரை என்றும் பாதுகாக்கும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு.
இவ்விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கும், உலகத்துக்கும் அவசியமற்றது. இலங்கை அரசு எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதையே முழு உலகும் எதிர்பார்த்துள்ளது.
பிரித்தானியா விதித்துள்ள தடையில் முன்னாள் இராணுவ தளபதி இருவர் மற்றும் கடற்படைத் தளபதி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமானதுடன், நாட்டின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும்.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இந்த தடையினை விதித்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாகவே தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். பிரித்தானியாவில் பலம் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள்தான் அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுகிறது.
மனித உரிமைகளை வெளிப்படையான முறையில் மீறும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. யூதர்களின் ஆதரவு அமெரிக்காவுக்கு அவசியமானது. இதுபோலதான் தமிழ் பிரிவினைவாதிகளின் கட்டளைகளுக்கு பிரித்தானியா இன்று அடிபணிந்துள்ளது. தொழில் கட்சி ஆட்சிக்கு வரும்போது இந்த போக்கு அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் பிரிவினைவாத கொள்கையுடைய கனேடிய தமிழ் கார்டியன் அமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகள் என்னவென்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இதுவரையில் உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றார்.
No comments:
Post a Comment