தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் மன உளைச்சலில் பிள்ளைகள் : சமூக வைத்திய நிபுணர் சிரந்திகா விதான - News View

About Us

About Us

Breaking

Friday, March 28, 2025

தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் மன உளைச்சலில் பிள்ளைகள் : சமூக வைத்திய நிபுணர் சிரந்திகா விதான

தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இளம் பிள்ளைகள் இதனால் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில் சமூகத்தில் உள்ள 18 சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலால் அவதிப்படுவதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் சிரந்திகா விதான தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,15 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் யௌவன பருவத்தினர் அல்லது இளம் பருவத்தினராவர். இந்நாட்டில் உள்ள மொத்த சனத் தொகையுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதமானோர் இளம் பருவத்தினராக உள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் பாடசாலை கல்வியை தொடர்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளின் மூளை வளர்ச்சி, மூளையின் பின் பகுதியில் இருந்து முன்னோக்கி நகர்கிறது. இளம் பருவத்தினரின் மூளையின் முன்மடல்கள் வளர்ச்சியடைந்திருப்பதில்லை. இதனால் தீர்மானங்களை எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதால் தவறான பழக்கங்களில் பிள்ளைகள் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இவற்றால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படைய வாய்ப்புள்ளதுடன் தொற்றா நோய்களுக்கும் ஆளாகலாம்.

கடந்த வருடம் 13 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மையமாக கொண்டு சர்வதேச பாடசாலை சுகாதார மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 10 பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,585 மாணவர்கள் மேற்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதற்கமைய சமூகத்தில் நிறை குறைந்த பிள்ளைகளின் சதவீதம் 21.4 ஆக அதிகரித்துள்ளதுடன், நிறை கூடிய பிள்ளைகள் 12.1 சதவீதமாகவும், உடற் பருமனான பிள்ளைகள் 3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

நாளாந்தம் மரக்கறி மற்றும் பழங்கள் உட்கொள்வோரின் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதுடன், உலர் உணவு வகைகள், துரித உணவுகள் ஆகியவற்றுக்கு பிள்ளைகள் பழக்கப்பட்டுள்ளமை ஆய்வுகளின்போது தெரியவந்துள்ளது.

17.4 சதவீதமான பிள்ளைகள் காபன் டை ஒக்சைட் அடங்கிய குளிர்பானம் அருந்துவதுடன் 28 சதவீதமானோர் நாளாந்தம் அன்றாடம் அதிக இனிப்பான பானங்களை அருந்துகின்றனர்.

மேலும் 70.4 சதவீதமான பிள்ளைகள் கடைகள் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து உணவுகளை கொள்வனவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதுடன் 4.3 சதவீதமான மாணவர்கள் வறுமை காரணமாக உணவின்றி தவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

7.5 சதவீதமானோர் தமக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என தெரிவித்துள்ளதுடன், 22.4 சதவீதமான மாணவர்கள் கடந்த வருடம் தனிமையில் இறந்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

அத்தோடு 11.9 சதவீதமானோர் மன உளைச்சல் காரணமாக தூக்கமின்மையால் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 18 சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 15.4 சதவீதமான மாணவர்களிடையே உயிர்மாய்ப்பு தொடர்பான எண்ணக்கருக்கள் இருந்துள்ளதுடன், 9.6 சதவீதமானோர் உயிர்மாய்ப்புக்கும் முயற்சித்துள்ளனர். இரவு நேரங்களில் 62.6 சதவீதமான சிறுவர்கள் 8 மணித்தியாலங்களுக்கும் குறைவாகவே உறங்குவதாகவும் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

18.9 சதவீதமான மாணவர்கள் பாடசாலையினுள்ளும், 8.8 சதவீதமானோர் வெளியிடங்களிலும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர். அத்தோடு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 5.4 சதவீதமானோர் இணையவழி பாலியல் சீண்டல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் பாவனை, தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை அதிகரிப்பால் பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு இடையிலான தொடர்பு குறைவடைந்துள்ளது. இதனால் பிள்ளைகள் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆகையால் பெற்றோர் இவைத் தொடர்பில் கண்காணிப்பது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment