ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கை : இலங்கை வெளிநாட்டு அமைச்சு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 27, 2025

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கை : இலங்கை வெளிநாட்டு அமைச்சு

“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின், வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம் (FCDO) வெளியிட்ட 2025, மார்ச் 24 எனத் திகதியிட்ட செய்தி வெளியீட்டை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கவனத்தில் கொள்கிறது.

செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, ஐக்கிய இராச்சியத்தின் அரசானது நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர்.

மேலும், ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகத்தின் வெளியீடானது, "இதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தின்போது செய்யப்பட்ட உறுதிமொழியை" குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது, இது தொடர்பில், ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும்; இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவை அடங்கும் என்பதை அமைச்சு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறது.

நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குகின்றன.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்களிடம், இன்று (27) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment