(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மின்சார சபை சட்டத்தை மறுசீரமைப்பதற்காக நிபுணத்துவ குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கும், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒன்று மின்சார சபையை தனியார் மயப்படுத்த வேண்டும் அல்லது பங்குகளை தனியாருக்கு வழங்க வேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையில் இருந்துகொண்டு அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, வலுசக்தி துறை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை என்னவென்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. சந்தை வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கின்றீர்களா அல்லது தனித்த கொள்வனவாளருடன் ஒன்றிணைந்து செயற்பட போகின்றீர்களா, ஆகவே உங்களின் அடிப்படை கொள்கை என்ன.
75 ஆண்டு கால அரசாங்கங்களின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கையினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று குறிப்பிட்டீர்கள். அவ்வாறாயின் வங்குரோத்து நிலையடையாத உங்களின் கொள்கை என்ன?
இலங்கை மின்சார சபை 2022 ஆம் ஆண்டு 298 பில்லியன் ரூபாய் நட்டம் எதிர்கொண்டிருந்தது. 2023 ஆம் ஆண்டு உற்பத்தி செலவுக்கு அமைய கட்டணம் மற்றும் இதர செலவுகளை நிர்ணயித்ததை தொடர்ந்து மின்சார சபை 61 பில்லியன் ரூபாய் இலாபமடைந்தது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 140 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. இக்காலப்பகுதியில் எடுத்த தீர்மானங்களினால் நட்டம் இலாபமடைந்துள்ளது. இந்த மாற்றத்தை எந்தளவுக்கு முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்பது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு மின்சார சபை சட்டத்தை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள நிலையில் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மாறுபட நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவில் 'பிரதான பங்குதாரர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவை அமைத்தால் மாத்திரமே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை சட்டத்தை மறுசீரமைப்பதற்காக 9 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆறு பேரும், லெகோ மற்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர்கள் இருவர் மற்றும் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் குழுவின் உறுப்பினர்களாவர்.
இந்த குழுவில் சட்டத்தரணிகளோ, நிதியியல் துறையுடன் தொடர்புடையவர்களோ உள்ளடக்கப்படவில்லை. இந்த குழு சமர்ப்பித்த அறிக்கைக்கு மாறாகவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ஒரு சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மீளாய்வு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மின் கட்டணம் திருத்தம் தொடர்பான அதிகாரம் மின்சார அமைச்சருக்கு வழங்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் கட்டண திருத்தம் தீர்மானம் மக்களின் அபிலாசைகளுடன் இடம்பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பொதுஜன அபிப்பிராயத்தின் ஊடாகவே மின் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜனாதிபதியின் அறிவுறுத்தல் சரி.
ஆகவே குழுவின் அறிக்கைக்கும், ஜனாதிபதியின் பரிந்துரைகளுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. மின்சாரத்துறை அமைச்சர் சரியா ? அல்லது ஜனாதிபதி சரியா? குழுவின் பரிந்துரைகளை முறையாக மீளாய்வு செய்யுங்கள்.
மின் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உலக வங்கியிடம் நிதியுதவியை அரசாங்கம் கோரியுள்ளது. மின்சாரத்துறை தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்காமல் நிதியுதவி வழங்க முடியாது என்று உலக வங்கி பதிலளித்துள்ளது. ஆகவே அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்பது சர்வதேசத்துக்கும் சிக்கலாக உள்ளது.
மின்சார சபையை ஒன்று முழுமையாக தனியார் மயப்படுத்த வேண்டும். அல்லது பங்குகளை தனியார் தரப்புக்கு வழங்க வேண்டும். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற நிலையில் இருக்க முடியாது. இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.
No comments:
Post a Comment