அரசாங்கம் தான்தோன்றித்தனமான நிலையில் இருந்து விலகி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : எரிபொருள் வரிசை எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, March 3, 2025

அரசாங்கம் தான்தோன்றித்தனமான நிலையில் இருந்து விலகி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : எரிபொருள் வரிசை எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம் - தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீதிமன்றம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் கூட்டுத்தாபனம் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாயின் அரசாங்கம் தான்தோன்றித்தனமான நிலையில் இருந்து விலகி எரிபொருள் விநியோகஸ்த்தர்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (3) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினால் பொதுமக்களே இன்று அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இந்த பிரச்சினை இன்று நேற்று தோற்றம் பெற்றதல்ல, 2010 ஆம் ஆண்டு விற்பனை விலையில் ஒரு லீற்றருக்கு நூற்றுக்கு 2.5 வீதம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

2015 மற்றும் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் 0.5 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டு, 3 சதவீத தரகுப்பணம் வழங்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் எரிபொருள் தீர்வை சூத்திரத்துக்கு அமைய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை தீர்மானம் எடுத்தது. இருப்பினும் சபையின் பிரதான சட்ட அதிகாரி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதுவே இன்று பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு எரிபொருள் தீர்வை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது எரிபொருள் விநியோகத்தர்கள் நீதவான் நீதிமன்றத்தக்கு சென்று அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பெற்றுக் கொண்டார்கள். 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எரிபொருளின் விலை சடுதியாக உயர்வடைந்ததை தொடர்ந்து இந்த இடைக்கால தடையுத்தரவை நீதவான் நீதிமன்றம் இரத்துச் செய்தது.

எரிபொருள் தீர்வை வரி சூத்திரத்தை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செயற்படுத்த முயற்சித்தபோது எரிபொருள் விநியோகஸ்த்தர்கள் கொழும்பு சிவில் மேல் நீதிமன்றத்துக்கு சென்று இடைக்கால தடையுத்தரவை பெற்றுக் கொண்டார்கள். இந்த தீர்மானத்தை உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்த்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் சுற்றறிக்கையை வெளியிடும் தீர்மானத்தை எடுத்துள்ளது. இதற்கு எதிராகவே விநியோகஸ்த்தர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளார்கள்.

இந்த பிரச்சினையை நான் கடந்த வாரம் சபையில் குறிப்பிட்டு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வியெழுப்பினேன். அதற்கு விடயதானத்தக்கு பொறுப்பில்லாத சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நிதி பிரதி அமைச்சர் ஆகியோர் பதிலளிக்கிறார்கள். பொறுப்பான அமைச்சர் ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் உங்களின் நிலைமை அமைச்சர் நிலை கவலைக்குரியது.

எமது தரப்பில் உள்ளவர்கள் தூய்மையானவர்கள் என்று அரசாங்கம் புகழ்பாடுகிறது. ஊழல் மோசடியால் தொழிலை விட்டு விலகி மனைவியிடம் விடுகை பத்திரத்தை அனுப்பி வைத்து நாட்டை விட்டுச் சென்றவர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும், பணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் இன்று நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்கள் பொறுப்புக் கூற வேண்டும்.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் 1400 பேர் ஈடுபடுகிறார்கள். இவர்களில் 236 பேர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவையாளர்கள், 100 பேர் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் சேவையாளர்கள் மிகுதி சேவையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுகிறார்கள். எரிபொருள் விநியோக கட்டமைப்பை முழுமையாக தனியார் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவோ அல்லது விநியோக கட்டமைப்பை நெருக்கடிக்குக்குள்ளாக்கவோ நாங்கள் விரும்பவில்லை. எரிபொருள் வரிசை எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம்.

ஆகவே தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தான்தோன்றித்தனமான நிலையில் இருந்து விலகி விநியோகத்தர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment