(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கடந்த காலத்தைப் போன்று மீண்டும் மக்கள் போராட்டம் உருவாகினால் அது அரசாங்கத்திற்கு எதிரானதாக அன்றி எதிர்க்கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும். மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை புரிந்துகொண்டுள்ளனர் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், எதிர்க்கட்சிக்கு இந்த விவாதத்தை சரியானவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாது போயுள்ளது. கடந்த காலங்களில் அரிசி பிரச்சினை, உப்பு பிரச்சினை தொடர்பில் கதைத்ததுடன் பல்வேறு பிரச்சினையை உருவாக்கவும் முயற்சித்தனர்.
இப்போது எரிபொருள் மாபியாக்களை உருவாக்கி இதன் மூலம் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண்கின்றனர். ஆனால் இது பகல் கனவாகவே இருக்கும். ஒருபோதும் எந்த நெருக்கடியும் வர இடமளிக்காது பொறுப்புடன் இந்த அரசாங்கம் நடந்துகொள்ளும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதனை நாங்கள் உறுதியாக கூறுகினறோம்.
இந்த வரவு செலவுத் திட்டம் வரலாற்று முக்கியத்துவமிக்கது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழும்போது முன்வைக்கப்படும் முதலாவது வரவு செலவு திட்டமாகும்.
அதேபோன்று கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை போன்று அல்லாது மக்கள் தொடர்பில் சிந்தித்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி, தேசிய வளங்களை விற்பதையும் தடுத்து நிறுத்தும் நாட்டுக்கு சாதகமான வரவு செலவுத் திட்டமாகும்.
குறிப்பாக எதிர்க்கட்சியினர் தற்போது வலுசக்தி விடயத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை உருவாக்க முயற்சித்தாலும் அவை அனைத்தும் புஸ்வானமாகிவிடும். வலுசக்தியானது கடந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு காரணமான துறையாகும்.
மின் துண்டிப்பு, எரிபொருள் வரிசை ஆகியன இன்றைய விடயத்துடன் தொடர்புடையதே. இங்கே வலுசக்தி துறையின் பாதுகாப்பு முக்கியமாகும். அதனை நாங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளோம்.
அதேபோன்று எரிபொருள் பிரச்சினையுடன் தொடர்புடையதாக கருத்தாடல் அதிகரிக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. சில ஊடகங்கள் பொய்களைக் கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சித்தன. ஆனால் எனது மாவட்டத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லை.
எவ்வாறாயினும் மக்கள் கடந்த காலத்தை போன்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கப்போவதில்லை. மாறாக எதிர்க்கட்சிக்கு எதிராகவே வீதிக்கிறங்குவார்கள். இதனால் எதிர்க்கட்சியினர் பொய்களை உருவாக்கும்போது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளூமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை புரிந்துகொண்டு பொறுப்புடன் நடந்துகொள்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் நன்றியை கூறிக்கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment