மத்திய வங்கி பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கல்களில் அர்ஜூன அலோசியஸிடமிருந்து நிதி பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக வர்த்தகம், வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் வரலாற்றை மறந்து செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அமைச்சர் வசந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர், “அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அறிக்கையில் அடிக்குறிப்பு எழுதியவர்கள் சம்பந்தமாக சில விடயங்களை சபையில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறின்றி பெயர் விபரங்களை வெளியிட வேண்டும்.
பிணைமுறி மோசடி விவகாரம் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டது. அலோசியஸ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைச்சாத்திட்ட 156 காசோலைகளில் தனியார் வங்கியொன்று ஊடாக நிதி பரிமாறப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அலோசியஸிடமிருந்து நேரடியாக நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நபருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து மதுபான நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் குறித்த மதுபான நிலையத்துடன் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டுள்ளார்கள். ஆகவே, மதுபான நிலையத்தின் உரிமையாளர்கள் எதிர்வரும் காலங்களில் சாட்சி சொல்ல நேரிடும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட ஹர்ஷ டி சில்வா, 100% நாம் இதற்கு இணக்கம் தெரிவிப்போம். அனைவரையும் பொதுவாக குறிப்பிடும்போது குற்றமற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பணம் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலை முழுமையாக வெளியிட்டால் நாம் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment