மித்தெனிய முக்கொலை : மற்றுமொரு கான்ஸ்டபிள் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

மித்தெனிய முக்கொலை : மற்றுமொரு கான்ஸ்டபிள் கைது

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு இடம்பெற்ற முக்கொலை தொடர்பாக, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால் வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 36 வயதுடையவர் ஜுலம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்களுக்கு T56 ரக துப்பாக்கிக்கான 12 தோட்டாக்களை சந்தேகநபர் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, இந்தக் கொலைச் சம்பவத்துடன் இதுவரை 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு மித்தெனியவில் உள்ள கடவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தந்தையான அருண விதானகமகே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மகனும், மகளும் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்தார், அதே நேரத்தில் ஒன்பது வயது மகன் மறுநாள் மரணமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மற்றும் தங்காலை பிரிவுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment