எரிபொருள் விநியோகஸ்தர்கள் புதிய சூத்திரத்திற்கு இணக்கம் : பிரச்சினை நிறைவு என்கிறார் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

எரிபொருள் விநியோகஸ்தர்கள் புதிய சூத்திரத்திற்கு இணக்கம் : பிரச்சினை நிறைவு என்கிறார் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்களது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போது (04) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய சூத்திரத்தை செயல்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதன்படி புதிய சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், விநியோகஸ்தர்களின் யோசனைகள் குறித்து ஆராய எதிர்வரும் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிபொருள் கொள்வனவாளர்களும் தாங்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை குறித்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பிரச்சினைகளைப் பற்றியும் மார்ச் 18ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டின் தற்போது எரிபொருள் தொடர்பான பிரச்சினை இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விநியோகஸ்தர்கள் இதுவரை பெற்று வந்த மேலதிக 3% கமிஷன் பணத்தை இடைநிறுத்தியமை தொடர்பில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகியதால் கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்றையதினம் (04) எரிபொருள் விநியோக சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment