பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2025

பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது - சஜித் பிரேமதாச

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாதாள குழுக்களுக்கிடையிலான மோதல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்தபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பது சம்பந்தமாக பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கடந்த 18 ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரையான 4 நாட்களில் 8 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. உண்மையில் இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய பிரச்சினையாகும். ஆனால் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

பாதாள குழுக்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதல் உண்மையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

ஏனெனில் அன்று புதுக்கடை நீதிமன்றத்துக்குள் மிலேச்சத்தனமான படுகொலை இடம்பெறும்போது, அன்றையதினம் பகல் வேளையில் பல ஊடகங்கள், இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குறித்த பெண்ணின் வர்ணப்புகைப்படத்தை புலனாய்வு துறையின் அறிக்கையுடன் காட்சிப்படுத்தி இருந்தன. புலனாய்வு துறையின் அந்த அறிக்கை நிச்சயமாக பாதுகாப்புத் துறைக்கு, சட்டம் ஒழுங்கு பிரிவுகளுக்கு கிடைத்திருக்கிறது. இந்த தாக்குதல் கம்பஹா பிரதேசத்திலேயே நடத்தப்பட இருந்ததாக இந்த சபையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல் கிடைத்திருந்த நிலையில், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தமை தொடர்பில் தெளிவான விளக்கம் ஒன்றை இந்த சபைக்கு அறிவிக்க வேண்டும். தெளிவாகவே இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

பாதாள குழுக்களின், கொள்ளைக்காரர்களின் செயற்பாடு உண்மையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதேநேரம் புலனாய்வு தகவல் கிடைக்கும்போது முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment