(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி ஒத்துழைப்பை இடைநிறுத்துவதாக அமெரிக்காவின் USAID நிறுவனம் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிவிக்கவில்லை. கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைய எடுக்கப்படும் தீர்மானங்களை அறிவிக்க USAID நிறுவனம் கடமைப்பட்டுள்ளது என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற அமர்வின்போது எதிரணியின் உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த வாய் மூல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சபையின் வினைத்திறனான சேவைக்கு அமெரிக்காவின் USAID நிறுவனத்தின் ஒத்துழைப்பு ஒப்பந்த அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கட்டளைக்கமைய USAID நிறுவனம் வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியுதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நிதியுதவி வழங்கலை இடைநிறுத்தல் அல்லது முழுமையாக இரத்துச் செய்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது அது தொடர்பான தீர்மானத்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் USAID நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை இடைநிறுத்துவதாக அமெரிக்காவின் USAID நிறுவனம் இதுவரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகவே உத்தியோகபூர்வமான தீர்மானம் அறிவிக்கப்படாத நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிடுவது சாத்தியமற்றது என்றார்.
No comments:
Post a Comment