தோட்டப்பகுதி வீதிகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - இராதகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

தோட்டப்பகுதி வீதிகள், பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - இராதகிருஷ்ணன்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையக தோட்டப் பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீ.இராதகிருஷ்னன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்துக்கு சுவீகரிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் கொண்டுவரப்பட்ட தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி, நகர சபை வீதி, பிரதேச சபை வீதி என்று பல்வேறு வகையான வீதிகள் உள்ளன. ஆனால் இவை யாருக்கு சொந்தமென எவருக்கும் தெரியாது.

தோட்டப்புற வீதிகளும் எவருக்கு சொந்தமானது என்று தெரியாது. இந்நிலையில் தோட்டப்புற வீதிகளை புனரமைக்க கடந்த கால அரசாங்கங்கள் குறிப்பிட்ட அளவிலான நிதியையே வழங்கியிருந்தன.

கொஞ்சம் தொகையை கொடுத்து இலங்கையிலுள்ள தோட்டப்பகுதி வீதிகளை அபிவிருத்தி செய்யுமாறு கூறினால் அதனை எவ்வாறு செய்ய முடியும்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலாவது இந்த விடயத்தில் நல்லதை செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டும் என்பதனை நாங்கள் குறிப்பிடுகின்றோம். அங்குள்ள பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த கால அரசாங்கங்களுக்கு இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள அவர்களுக்கு முடியாமல் போயிருக்கலாம். அதற்கு நிதி பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போதுள்ள அரசாங்கத்துக்கு அதனை செய்ய முடியும் என்றார்.

No comments:

Post a Comment