(செ.சுபதர்ஷனி)
இலங்கையின் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் தேசிய அபிவிருத்தி திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவின் மிகப்பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான, பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், அந்நிறுவனத்தின் அனைத்துத் துறைசார் அதிகாரிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ்வாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில், மருத்துவ ஆராய்ச்சி என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாக உள்ளது. நோய்களை கண்டறிதல், சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் வாழ்க்கை முறை, சிகிச்சை சேவைகள் மற்றும் மருந்துகள் ஆகியவை மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகளின் மூலம் பரிசீலிக்கப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சி, விசேட இரசாயன பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்நாட்டு சுகாதாரப் பராமரிப்புக்கு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருவதுடன் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
நோய் கண்காணிப்பு, தடுப்பூசி தரக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார நிபுணர்களின் பயிற்சி மற்றும் வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று உயிரியல் போன்ற துறைகள் தொடர்பில் சுமார் 125 வருட காலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவரும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு சிறுநீரக நோய்களுக்கான இம்யூனோஃப்ளோரசன்ஸ் பரிசோதனைகளுக்காக கிரையோஸ்டாட் மைக்ரோடோம் சாதனம் உட்பட பல உபகரணங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. ஆகையால் தற்போது கண்டறியப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகளால் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நாடு முழுவதும் அமைந்துள்ள அனைத்து அரச மற்றும் தனியார் மருத்துவ ஆய்வகங்களின் தரத்தை ஆறாய்தல், நாட்டிற்குள் நுழையும் புதிய வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்களை அடையாளங் காண ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், அதிநவீன பரிசோதனைகளை நடத்துதல் உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் முக்கிய சேவைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் ஒழுங்கமைக்கப்படும். இலங்கையின் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் தேசிய அபிவிருத்தி திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment