(இராஜதுரை ஹஷான்)
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தேசிய பாதுகாப்பை அரசாங்கம் அலட்சியப்படுத்தக்கூடாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேலதிக வகுப்பு நடத்த தயார் என்று குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்திக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேலதிக வகுப்பை நடத்த வேண்டியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் சாதாரணமாக இடம்பெறுகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அல்லது அலட்சியப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பிரபல்யத்துக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது. அதன் விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலாக மாறியது. ஆகவே தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடாது.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேலதிக வகுப்பு நடத்த தயார் என்று குறிப்பிட்ட தரப்பினருக்கு தேசிய பாதுகாப்பு என்றால் என்ன, அதன் அம்சங்கள் என்னவென்பது குறித்து மேலதிக வகுப்பு நடத்த வேண்டியுள்ளது.
அரசியல் பிரபல்யத்துக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் சவாலுக்குபடுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் சிறந்த தீர்வினை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment