அமெரிக்கா வெளியேறுவது இலங்கைக்கு பெரும் சாதகம் - கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா - News View

About Us

About Us

Breaking

Friday, February 7, 2025

அமெரிக்கா வெளியேறுவது இலங்கைக்கு பெரும் சாதகம் - கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள அமெரிக்கா எதிர்வரும் 58ஆவது அமர்வில் வெளியேறவுள்ளதால் நாட்டுக்கு பெரும் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரும், கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீபாளி வளாகத்தின் தலைவருமான கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மனித உரிமைகள், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள சவால்களில் இருந்து மீள்வதற்கான உள்நாட்டு தேசிய பொறிமுறையை மேற்குலக நாடுகளுக்கு முன்மொழிந்து உரையாடுவதற்கான பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவினைப் பெற்று முன்னகர்வதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி அரசாங்கத்துடன் கூட்டிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் உறுப்புரிமையிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அமெரிக்கா வெளியேறுமென இராஜாங்கத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் வெளியேற்றமானது, இலங்கைக்கு எவ்விதமான சாதக,பாதக நிலைமைகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 58ஆவது கூட்டத் தொடரின்போது வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளமை உறுதியாகின்றது.

இந்த தருணத்தில் இலங்கைக்கு அழுத்தங்களை அளிக்கும் வகையில் அந்த நாட்டினால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பு, போர்க் குற்றவாளிகளுக்கான பயணத் தடைகள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கான பொருத்தமான தருணம் ஏற்பட்டுள்ளது.

விசேடமாக, அமெரிக்காவின் பிரேணையை மறுதலிக்கும் வகையில் உள்நாட்டில் ஒருதசாப்த்த காலத்தை மையப்படுத்திய மனித உரிமைகள் செயற்பாட்டு பொறிமுறையொன்றை முன்மொழிவதற்கும் அதனை மேற்குல நாடுகள் மத்தியில் கலந்துரையாடி ஆதரவினைப் பெறுவதற்கான தக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், போரின் பின்னரான சூழலில் அதிக உணர்திறன் கொண்ட விடயங்களாக இருக்கும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள், பொதுமக்களின் மரணங்கள் சம்பந்தமான விடயங்களை கையள்வதற்கான, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நிறுவுதல், இழப்பீட்டுப் பணியகத்தை செயற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை செயற்படுத்துவதற்கான முன்மொழிவுகளையும் மேற்கொள்வற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மேற்படி உள்நாட்டு தேசிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சர்வதேச சமுகத்தின் ஆதரவினையும், ஒத்துழைப்புக்களையும் இந்தியா, தென்னாபிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதரவுடன் முன்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மேற்கொள்ள வேண்டும். அதற்கான தயார்ப்படுத்தல்களை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்வது மிகவும் அவசியமாகின்றது.

அதேநேரம், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமது தாய்மொழியில் அரசசேவைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு நாடாளாவிய ரீதியில் எந்தவொரு இலங்கை பொதுமகனும் மொழி ரீதியாக இரண்டாம் தரப்பிரஜையாக உள்ளேன் என்ற மனோநிலை உருவாகதவாறு அரச மொழிக் கொள்கை அமுலாக்கப்படுவது அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை தற்போது ஏற்பட்டிருக்கின்ற உள்நாட்டு மற்றும் பூகோள மாற்றங்களை பயன்படுத்தி முன்னெடுகின்றபோது, இலங்கையின் இறைமை மீதான சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீள முடியும். அத்துடன் உள்நாட்டு பொறிமுறைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment