(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை அரசாங்கம் இந்தியாவிடம் பொறுப்பாக்கியுள்ளது. இது வெட்கக்கேடானது. அவ்வாறாயின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அனைவரும் இந்திய தூதுவரை சந்தித்து பிரச்சினைகளை குறிப்பிட வேண்டும். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த பாதீட்டை தூக்கி எறிய வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாணத்தை முற்றாக புறக்கணித்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த வரவு செலவுத் திட்ட உரையில் ' கிழக்கு மாகாணம் பொருளாதார வலயங்களில் மிகவும் முக்கியமான மாகாணம்.அந்த மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், கடற்றொழில், சுற்றுலாத்துறை, சமூக வலுவூட்டல் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு மற்றும் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்காக இந்திய கூட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை இந்தியாவிடம் இந்த அரசாங்கம் பொறுப்பாக்கியுள்ளது. இது வெட்கக்கேடானது. அவ்வாறாயின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் அனைவரும் இந்திய தூதுவரை சந்தித்து எமது பிரச்சினைகளை குறிப்பிட வேண்டும்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிழக்கு மாகாணமே மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கினால் கிழக்கு மாகாணத்தில் விவசாய நிலங்கள் நாசமடைந்தன. அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தின் கட்டுமானம் உடைவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் எதிர்வரும் காலங்களில் சிறந்த விளைச்சலை பெற முடியாது. கிழக்கு மாகாணத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இது பாரியதொரு பிரச்சினையாகும்.
நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த பாதீட்டை தூக்கியெறிய வேண்டும்.
எமது மக்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். வரவு செலவுத் திட்டத்தை பிரதேச ரீதியாக பார்க்க வேண்டாம் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார். இது என்ன மடத்தனமான பேச்சு, மக்களின் பிரச்சினைகளை பேசவே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள்.
தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தி நிதியை இந்தியாவிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவது வெட்கமில்லையா?
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் - தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கினார்கள். எங்கு சென்று யாரிடம் நிதி கேட்க சொல்கின்றீர்கள்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள பாலம் உடைந்தது, அங்கு தற்காலிகமாக பாலமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை புனரமைப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கவில்லை. ஏன் இந்த நிலைமை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் பாரிய இடர்கள் தோற்றம் பெற்றுள்ளன. இதற்கு என்ன தீர்வு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதும் இல்லை முழுமையாக அதிருப்தியடைகிறேன். கிழக்கு மாகாணத்தை புறக்கணித்து விட்டு இந்தியாவிடம் நிதி கேட்பது முறையற்றது.
கிழக்கு மாகாணத்தில் அருகம்பை, பொதுத்துவில், பாசிக்குடா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகள் பிரதான சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இந்த பகுதிகள் ஊடாக அதிகளவில் வெளிநாட்டு வருவாயை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கான எந்த திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தில் புகையிரத சேவையை மேம்படுத்த எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அண்மையில் புகையிரதத்தில் உறங்கல் வகுப்பில் சென்றேன். 4800 கட்டணம் அறவிடப்படுகிறது. உறங்கல் வகுப்பில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைக்கு ஏறுவதற்கு 3 அடி அளவில் ஏணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் எவ்வாறு இவற்றை பயன்படுத்துவார்கள். அத்துடன் மலசலகூட வசதிகள் மிக மோசமாகவுள்ளது.
மஹவ புகையிரத சந்தியில் அரை மணித்தியாலம் புகையிரதம் நிறுத்தி வைக்கப்படும். புகையிரத என்ஜினை மாற்றுவதற்கு அரை மணி நேரம் செலவழிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் எவ்வாறு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது. கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து கடும் அதிருப்தியடைகிறோம் என்றார்.
No comments:
Post a Comment