(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2028ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். 2024ஆம் ஆண்டு காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட இந்த ஆண்டு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியது. ஏனெனில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான மூலோபாய திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு செலவுத் திட்டத்தை எனது நண்பரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார். என்னையும் நகைத்தார் பரவாயில்லை அவர் என் நண்பரே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நான் கோருவதை ஜனாதிபதியால் வழங்க முடியாது.
பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு ஆளும் தரப்பினர் ஒரு சிலர் முறையற்ற வகையில் எதிர் கருத்தை குறிப்பிடுவதையிட்டு வெட்கமடைகிறேன்.
மாத்தளை பகுதியில் உள்ள ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். அவர் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். கோட்டபய ராஜபக்ஷவின் காலத்திலும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.
கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. பாராளுமன்றத்தில் அனைத்து குழுக்களின் தலைமைத்துவத்தையும். உறுப்புரிமைகளையும் கைப்பற்றியது. இறுதியில் நேர்ந்தது என்ன? நாடும் வங்குரோத்து நிலையடைந்தது, அந்த அரசியல் கட்சியும் வங்குரோத்து நிலையடைந்தது. இதனை தற்போதைய அரசாங்கமும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரச வருமானம் பற்றி வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கான திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆனால் அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு முன்னிலையான அரச அதிகாரிகள் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக குறிப்பிடுகிறார்கள். ஜனாதிபதியின் கருத்துக்கும், அரச அதிகாரிகளின் கருத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. அனைத்தும் குழப்பமடைந்துள்ளது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கைச் செலவை குறைப்பதாகவும், சம்பளத்தை அதிகரிப்பதாகவும், ஜப்பான் வாகனத்தை குறைந்த விலைக்கு வழங்குவதாகவும் கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏதும் இல்லை. கடந்த காலங்களில் சாபம் என்று விமர்சித்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளையே அரசாங்கம் தற்போது முன்வைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை வேறு அரச நிதி கொள்கை வேறு. ஆனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையை அரச நிதி கொள்கையாக குறிப்பிட்டுக் கொள்கிறது.
தேசிய கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கான யோசனைகளை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் முன்வைப்பார் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்கள் தொடர்பில் ஒருவார்த்தைக் கூட குறிப்பிடப்படவில்லை.
இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் பிரத்தியேக திருத்தமொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.
2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். 2035 ஆம் ஆண்டு வரை இந்த போக்கு காணப்பட வேண்டும். 2024ஆம் ஆண்டு காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட இந்த ஆண்டு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியது.
வரவு செலவுத் திட்டத்தில் ஒரு சில சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஊழல் எதிர்ப்புக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்போம். பொருளாதார விவகாரத்தில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment