பெயர்ப்பட்டியலை வெளிப்படுத்திக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுங்கள் : மக்கள் விடுதலை முன்னணி ராஜபக்ஷ் அரசாங்கத்தை நிர்மாணிக்க பாடுபட்டது - சபையில் சுட்டிக்காட்டிய சுஜீவ சேனசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2025

பெயர்ப்பட்டியலை வெளிப்படுத்திக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுங்கள் : மக்கள் விடுதலை முன்னணி ராஜபக்ஷ் அரசாங்கத்தை நிர்மாணிக்க பாடுபட்டது - சபையில் சுட்டிக்காட்டிய சுஜீவ சேனசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்க காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடி காரர்களின் பெயர்ப்பட்டியலை வெளிப்படுத்திக் கொண்டிருக்காமல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கி இருக்கிறது. அதேநேரம் நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் இவர்களை ஆட்சிக்கு கொண்டுவர இரவு பகலாக முயற்சித்து வந்தது மக்கள் விடுதலை முன்னணியாகும் என சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கையை விட்டு விட்டு அரசாங்கம் அந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காகவே மக்கள் பாராளுமன்றத்தில் 3 வீதம் இருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் இதனை தெரிவித்துக்கொண்டு இருப்பதற்கு அல்ல.

அதேநேரம் ஊழல் மோசடி மேற்கொண்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களை நாட்டின் ஆட்சிபீடத்துக்கு கொண்டுவர இரவு பகலாக உழைத்து வந்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். ஏனெனில் ராஜபக்ஷ அரசாங்க காலத்திலே அதிகமாக ஊழல் மோசடி மற்றும் பாதாள நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன.

அது தொடர்பில் இந்த சபையில் நானே அதிகம் பேசி இருக்கிறேன். ஆனால் ராஜபக்ஷ் அரசாங்கத்தை நிர்மாணிப்பதற்கு இவர்கள்தான் பாடுபட்டார்கள். நாங்கள் ராஜபக்ஷ்வினருக்கு ஆதரவளிக்கவில்லை. அவர்களுடன் இணைந்து செயற்படவும் இல்லை.

அத்துடன் அரசாங்கத்தின் கோடிக்கணக்கான பணம் செலவழித்து யாராவது உத்தியோகபூர்வ இல்லங்களில் இருப்பதாக இருந்தால் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்து கடிதம் அனுப்புங்கள். அரசாங்கத்தின் பணம் வீண் விரயமாகுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் சொல்லிக் கொண்டிருக்காமல் உடனடியாக அதனை செயற்படுத்துங்கள்.

அதேபோன்று பகல் வேளையில் மனிதப் படுகொலை இடம்பெறுவதாக இருந்தால் சர்வதேச நாடுகளுடன் எவ்வாறு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வது என்றே ஜனாதிபதி அன்று தெரிவித்தார். அதேபோன்று பட்டப்பகலில் கொலைகள் இடம்பெறுமானால் அது ஒரு நாடா என்றே அவர் தெரிவித்திருந்தார். ஆனால் பாதாள நடவடிக்கைகள் இடம்பெறுவது சாதாரண விடயம் என்றே இவர்கள் இன்று தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று தனியார் துறையின் சம்பளத்தை நூற்றுக்கு 40 வீதம் அதிகரிப்பதாக தெரிவித்தார்கள். அது செய்வது கடினம் என எமக்கு தெரியும். ஆனால் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் இவ்வாறுதான் மக்களுக்கு தெரிவித்தார்கள்.

அரிசி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் இருக்கிறது. அரிசி பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதாகவே தெரிவித்தார்கள். ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் கடந்தும் அதனை செய்ய அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போயிருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு வாக்குறுதி அளித்த எதனையும் அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போயிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment