(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 18 இலட்சம் ரூபா செலவில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு சென்றார் என்பது புரியவில்லை. மிதிபலகையில் தொங்கிக் கொண்டு போனாலும் அவ்வாறு குறைந்த செலவில் வெளிநாட்டு பயணத்தை செய்ய முடியாது என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் எந்த திசையை நோக்கி இந்த நாட்டை கொண்டு செல்லப்போகின்றது என்பது புரியவில்லை. எவ்வாறு இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டது என்றும் புரியவில்லை.
இந்த அரசாங்கம் சோஷலிச அரசாங்கம் என்று கிராமங்களில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.
கிராமங்களில் உள்ளவர்களை எவ்வாறு மேலே கொண்டு வரப்போகின்றோம் என்றோ அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் முன்னேற்றமடைய வேண்டும்.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்தக் கனவுகளுக்கு உயிரூட்டப்படுமா? என தெரியவில்லை. ஆனால் உள்ள கனவுகளையும் கலைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் கழுத்தை நெரித்தாலும் அதற்கு இடமளிக்காது அப்பாவிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
இந்நிலையில் இந்த அரசாங்கம் பழைய அரசியலையே செய்கின்றது. இவர்களின் அரசியலுக்குள் மறைந்துள்ள அரசியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயன்படுத்திக் கொண்டு செல்லப்படும் பயணத்தில் இந்த நாட்டை முன்னால் கொண்டு செல்ல முடியாது.
மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்த அரசாங்கத்துக்கு பெரும் பொறுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகளுடன் உள்ள மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு உள்ளது. அவர்களின் சம்பளம், வருமை நிலையில் உள்ளவர்கள், சுற்றுலாத்துறை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் பாரிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
உங்களின் அரசியல் இருப்புக்காக மட்டும் செயற்படுகின்றீர்கள். அரசியல் கலாச்சாரத்தை மாற்றுகின்றோம் என்று கூறி செலவுகளை குறைப்பதால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நிதியை உருவாக்க வேண்டும். அதற்காக மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்த வேண்டும். அதற்காக மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
செலவுகள் மற்றும் வீணடிப்புகளை குறைப்பதால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்துவிட முடியாது. ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவரின் உரையில் ஜனாதிபதி 1.8 மில்லியன் ரூபாவில் மூன்று நாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எப்படி அவர் சென்றார் என்று தெரியவில்லை.
மிதிபலகையில் தொங்கிக் கொண்டு போனாலும் அந்த தொகையில் எவ்வாறு மூன்று நாடுகளுக்கு சென்றிருக்க முடியும் என்று புரியவில்லை. அவர் எப்படி குறைந்த செலவில் மூன்று நாடுகளுக்கு சென்றார் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார்.
No comments:
Post a Comment