(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகார பகிர்வையே எதிர்பார்க்கிறோம். புதிய அரசியலமைப்பு வருமா, வராதா, என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும். பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இம்முறையும் சாதகமான தீர்வினையோ அல்லது புதிய முன்மொழிவுகளையோ முன்வைக்கவில்லை. பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த அரசாங்கமும் கடந்த காலங்களைப் போன்றே செயற்படுகிறது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தற்போது நடைபெறுகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவுக்கு சென்று பல விடயங்களை கூறியுள்ளார். ஆனால் பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த காலங்களில் செய்த விடயங்களை விட புதிய அரசாங்கத்தின் புதிய முன்மொழிவுகள் எதனையும் கூறவில்லை. வடக்கு, கிழக்கு மக்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் கரிசனையுடன் உள்ளனர். கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
எம்மக்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கங்கள் செய்ததைப் போன்றே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் உள்ளிட்ட பொறிமுறைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தற்போது கூறியிருந்தாலும் இவை அனைத்தும் தமிழ் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நிராகரித்த பொறிமுறைகளாகும்.
இதேவேளை வடக்கு மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர். உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். ஆனால் அது தொடர்பில் இன்றுவரையில் ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை புதிய அரசியலமைப்பில் நிரந்தரப் பெயராக உள்ளடக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
அமைச்சர் சந்திரசேகரனிடம் ஒன்றை கேட்கின்றேன். வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எதிர்பார்க்கின்றனர். அதுபற்றி நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். அதிகார பகிர்வை விடுவோம். ஆனால் புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? வந்தால் அதில் உள்ளடக்கம் என்ன?
பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான ஒதுக்கீடுகளும் இன்றைய விவாதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் பொறுப்புக்கூறல் என்பது மிகவும் பிரதானமான விடயமாகும். ஆனால் வெளிவிவகார அமைச்சர் எந்த சாதகமான பதிலையும் வழங்கவில்லை. இதற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பதிலளிப்பார்கள் என்றார்.
No comments:
Post a Comment