புதிய அரசியலமைப்பு மூலமே நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் : கேள்விகளுக்கு பட்ஜெட் விவாதம் முடிவடைவதற்கு முன்னர் பதிலளிக்க வேண்டும் - சபையில் தெரிவித்த மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

புதிய அரசியலமைப்பு மூலமே நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் : கேள்விகளுக்கு பட்ஜெட் விவாதம் முடிவடைவதற்கு முன்னர் பதிலளிக்க வேண்டும் - சபையில் தெரிவித்த மனோ கணேசன்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னர் அரசியலமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், புதிய அரசியலமைப்பின் தேவைப்பாடு தொடர்பில் வீரகேசரி உள்ளிட்ட அதிகமான தமிழ் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்க்தின் தேர்தல் விஞ்ஞான கொள்கையிலும் அது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய அரசியல் அமைப்பின் மூலமே இனப் பிச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக இந்த அரசாங்கம் தேர்தல் பிரசார காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அதிகாரத்துக்கு வந்து 3 மாதங்களில் உருவாக்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

அத்துடன் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னர் புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேநேரம் புதிய அரசியலமைப்பு 3 வருடங்களுக்கு பின்னர் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு தெரிவித்துவந்த வாக்குறுதிக்கு மாற்றமானதாகும்.

மேலும் மலையக மக்களுக்கு ஏற்பட்டிருப்பது 76 வருட சாபக்கேடு அல்ல. 200 வருட சாபக்கேடு. அதனால் அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதற்கு முன்னர் அங்கு முறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதனைவிடுத்து கடந்த காலங்களில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளை, அரசியல்வாதிகளை விமர்சிப்பதில் பயனில்லை.

மக்கள் தற்போது இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கி இருக்கிறார்கள். அதனால் அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம்.

மேலும் மலையகத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பில் நான் இந்த சபையில் கேட்டிருந்தேன். அதற்கு பிரதி அமைச்சர் ஒருவர் ஆவேசப்பட்டு பதில் அளித்திருந்தார். நான் வேறுமன இதனை கேட்கவில்லை. ஏனெனில் மலையகத்தில் அமைக்கப்படும் வீடுகள் மாடி வீடா தனி வீடா என அரசாங்கத்துக்குள்ளே மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதனாலே இதனை கேட்டேன்.

அதேபோன்று அந்த வீடுகளை அமைப்பதற்கு காணி வழங்குவதாக இருந்தால் எத்தனை பேர்ச் காணியை அரசாங்கம் வழங்கப்போகிறது. ஏனெனில் நாங்கள் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியை போராடி பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

கடந்த அரசாங்க காலத்தில் அது 10 பேர்ச் காணியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அரசாங்கம் இந்த கேள்விகளுக்கு இந்த வரவு செலவு திட்ட விவாதம் முடிவடைவதற்கு முன்னர் பதிலை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment