நுகர்வோருக்கு மின்சார இணைப்புகளை வழங்கும்போது, மின்சார சபையினால் அறவிடப்படும் வைப்புத் தொகைக்கு வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (28) இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி நுகர்வோர் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று (28) எஸ். துரைராஜா, சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, மின்சாரச் சட்டத்தின் பிரிவு 28(2) இன் கீழ் மின்சார இணைப்புகளை வழங்கும்போது நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் வைப்புத் தொகைக்கு இலங்கை மின்சார சபை வருடாந்த வட்டியை செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தனது சமர்ப்பணங்க முன்வைத்தார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்கொணர்வு மனுவொன்றை முன்வைத்த இலங்கை மின்சார சபை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட 11.67% வருடாந்த வட்டி விகிதத்தை, வீட்டு மின்சார பாவனையாளர்கள் உளிட்ட மின்சார வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்தப் மனுவின் மூலம் ஒப்புக்கொண்டபடி செயல்படுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் வீட்டு மின்சார நுகர்வோர் உள்ளிட்ட மின்சார பயனர்களுக்கு வருடாந்த வட்டியை வழங்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டது.
No comments:
Post a Comment