(எம்.ஆர்.எம்.வசீம்)
எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டாலும் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு எந்த நோக்கத்தில் ஜனாதிபதி என்னை நியமித்தாரோ அந்த இலக்கை அடைய பாடுபடுவேன். மேல் மாகாணத்தை பொருளாதார மத்திய நிலையமாக மாற்றியமைக்கும் எனது பயணத்தை தொடர்வேன் என மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தெரிவித்தார்.
கடுவலை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (3) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மேல் மாகாணத்தை தூய்மையாக்கும் பணியை திங்கட்கிழமை (3) முதல் ஆரம்பித்திருக்கிறோம். கொழும்பு மாவட்டத்தில் மாலபே பிரதேச சபையிலிருந்து இந்த பணியை ஆரம்பித்திருக்கிறோம். எதிர்வரும் 9ஆம் திகதி வரை 5 ஆயிரம் சிரமதான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.
மேல் மாகாணத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் வரை அரச ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களின் வீடுகள், அயல் வீடுகள் விகாரைகள் பாடசாலைகள் என அனைத்து விடயங்களையும் கண்காணிக்குமாறு அவர்களுக்கு தெரிவித்திருக்கிறோம்.
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை இதிலிருந்து ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். அதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
இந்த நாட்டின் பொருளாதார மையம் மேல் மாகாணமாகும். அதனால் மேல் மாகாணத்தை தூய்மைப்படுத்தி அபிவிருத்தியடையச் செய்யவே ஜனாதிபதி என்னை இந்த பதவிக்கு நியமித்தார். ஜனாதிபதியின் நோக்கத்தை நிறைவேற்றும் சிந்தனையிலேயே நான் செயற்படுகிறேன்.
நாட்டின் மொத்த வருமானத்தில் நூற்றுக்கு 44 வீதம் மேல் மாகாணத்திலேயே இருக்கிறது. அதனால் மேல் மாகாணத்தை பொருளாதார ரீதியில் மேலும் அபிவிருத்தியடையச் செய்வதே எனது நோக்கம். அது தொடர்பாகவே நான் சிந்தித்து வருகிறேன்.
சுங்கத் திணைக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொள்கலன்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அது பொய்யான குற்றச்சாட்டாகும்.
அது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடும் செய்திருக்கிறேன். அதனால் குற்றப் புலனாய்வு பிரிவு அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும்.
அரசியல் செய்வதற்கோ மோசடி நடவடிக்கைகளுக்கோ நான் இந்த பதவியை ஏற்கவில்லை. எனது கரங்கள் சுத்தம் என்பது எனக்கு தெரியும். அதனாலே இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை அறியத்தருமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்திருக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment