வழக்கு விசாரணைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவாருங்கள் அல்லது வாபஸ் பெறுங்கள் : பாராளுமன்றத்தில் தெரிவித்த ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

வழக்கு விசாரணைகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவாருங்கள் அல்லது வாபஸ் பெறுங்கள் : பாராளுமன்றத்தில் தெரிவித்த ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளை அரசாங்கம் விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி செலவின தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், போராட்டக்காரர்களை அடக்குவதற்கு அவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் போராட்டக்காரர்களுக்காக முன்வந்த சட்டத்தரணிகள் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கின்றனர்.

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியிலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனால் இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க வேண்டும். அல்லது இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த அரசாங்க காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொண்டு, தங்களுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அப்போதிருந்த அரசாங்கத்திடம் கோரி வந்தனர். தற்போது அவர்கள் நீதிமன்றங்களில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

அது மாத்திரமல்லாது அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் தடை செய்யப்பட்டு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அரசாங்கம் இவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில், அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளை விரைவாக முன்னெடுத்து முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment