தற்போது பொலிஸ்மா அதிபராக செயற்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் 7 பேர் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சந்தேகநபர்களாக பெயரிடுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பெலேன பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு முன்னால் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் குழு மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பான வழக்கிற்கு அமைய குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணை தீர்ப்பு நேற்றையதினம் (27) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றையதினம், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவொன்று, ஹரக் கட்டாவுக்கு நெருக்கமான ஒரு குழுவைக் கைது செய்ய மாத்தறையின் வெலிகம பகுதிக்கு வேன் ஒன்றில் சென்றிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மரணமடைந்திருந்தார்.
குறித்த ஹோட்டலை நோக்கி சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது வேன் ஒன்றிலிருந்து சூடு நடத்தப்பட்டதையடுத்து, குறித்த திசை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெலிகம பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் வெலிகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நடமாடும் ரோந்து வாகனம், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகள் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
குறித்த வேனில் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் அந்த இடத்தை விட்டு சென்ற நிலையில், வேனில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுடப்பட்டு காயமடைந்திருந்தனர். இதன்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.
கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 47 வயதான உபுல் சமிந்த குமார எனும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அதன்படி, வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்றும், அதன்படி, அவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இருப்பினும், அன்றையதினம் சம்பவ இடத்திற்கு வந்த கொழும்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகளையும், அப்போது பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய தேசபந்து தென்னகோன் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அன்ஸ்லம் டி சில்வா மற்றும் அப்பிரிவின் 6 அதிகாரிகள் உள்ளிட்ட 8 அதிகாரிகளையும் கைது செய்து இந்த வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி தொடரப்பட்ட ஒன்பது அடிப்படை உரிமைகள் மனுக்களைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதை தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment