2024ஆம் ஆண்டு வருமானம் மற்றும் மானியங்கள் 33.1% இனால் அதிகரிப்பு : பொருளாதார வெற்றிக்கு பிரதான காரணம் நிதி ஒழுக்கங்களாகும் - அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2025

2024ஆம் ஆண்டு வருமானம் மற்றும் மானியங்கள் 33.1% இனால் அதிகரிப்பு : பொருளாதார வெற்றிக்கு பிரதான காரணம் நிதி ஒழுக்கங்களாகும் - அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் தெரிவிப்பு

2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு வருமானம் மற்றும் மானியங்கள் 33.1% இனால் அதிகரித்திருப்பதாகவும், இது 2024ஆம் ஆண்டு எதிர்பார்த்த இலக்கைவிட 99.1% அதிகமான, வரலாற்றிம் உயர்ந்த இலக்கை அடைந்திருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவில் நிதியமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 25ஆம் திகதி கூடியபோது, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டின் நிதி செயல்திறன் குறித்து விளக்கமளித்த நிதி அமைச்சின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

வற் வரி விகிதத்தை உயர்த்தியமை மற்றும் வற் வரி சலுகை வழங்கப்பட்டிருந்த 137 பொருட்களை 95 ஆகக் குறைத்தமை இந்த நிலைமைக்குப் பங்களித்ததாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த நிதி ஒழுக்கத்தைப் பேணுவதற்கு முடிந்தமையும் இந்த வெற்றிக்கு காரணம் என்றும், எதிர்காலத்தில் இந்த நிலைமையை மேலும் மேம்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அரசாங்க நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நிதி ஒழுக்கம் மற்றும் செலவினக் கட்டுப்பாடு பேணப்பட்டமையே இதற்கு காரணம் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய உருவாக்கப்பட்ட நிதி ஒழுக்கத்தை நீண்ட காலத்திற்கு பேணுவது பொருளாதார வெற்றிக்கு அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

2024ஆம் ஆண்டு வருமானம் மற்றும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.6% ஆகக் காணப்பட்டதுடன், 2029ஆம் ஆண்டு இது 15.3% ஆக எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

2029ஆம் ஆண்டில் எட்டப்படவிருக்கும் இந்த இலக்கு குறித்துத் திருப்தியடைய முடியாது என அரசாங்க நிதி பற்றிய குழு சுட்டிக்காட்டியது. பொதுவாக நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் இது 20% ஆக இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதன் ஊடாக இந்த நிலைமையை அதிகரிக்க வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. 

அத்துடன், சரியான வரி நிர்வாகத்திற்கு மேலதிகமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களுக்கு KPI முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக இந்த இலக்கை அடைவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை பொதுமக்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ‘மக்கள் வரவு செலவுத் திட்டம்’ குறித்த சுருக்கமான விடயங்கள் அதிகாரிகளினால் குழுவில் முன்வைக்கப்பட்டது. இதற்கு அமைய, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள முறைமைகள் குறித்து இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

அரசாங்கம் தங்கள் வரிப் பணத்தை எவ்வாறு மிகவும் வெளிப்படையான முறையில் பயன்படுத்துகிறது என்பதை வரி செலுத்துவோருக்கு அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ‘மக்கள் வரவு செலவுத் திட்ட’ அறிக்கையை 2024ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டு ரீதியில் முன்வைக்குமாறும் குழு, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. சராசரி பிரஜைகளும் புரிந்துகொள்ளும் வகையிலும், சுவாரஸ்யமான முறையிலும் இந்த அறிக்கையைத் தயாரித்தமைக்காக நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் குழு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தது.

அதேநேரம், வாகன இறக்குமதியின் மூலம் எதிர்பார்க்கும் வரி வருமானம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதுவரை 83 மில்லியன் ரூபாவுக்கு கடன் உறுதிக் கடிதம் திறக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருக்கும் பின்னணியில் எதிர்பார்க்கப்படும் பாரிய வரி வருவாயான ஏறத்தாழ 330 பில்லியன் ரூபா என்ற இலக்கை அடைவது நடைமுறைச் சாத்தியமானதா என்றும் குழு கேள்வியெழுப்பியது. 

அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்பார்க்கப்படும் இந்த வரி வருவாய் தொடர்பில் அவ்வப்போது குழுவுக்கு தகவல்களை வழங்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும் 2024 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் அரசாங்க நிறுவனங்கள் ஈட்டிய இலாபம் மற்றும் அடைந்த நஷ்டங்கள் குறித்தும் அதிகாரிகள் கருத்து
தெரிவித்தனர். 

இதற்கு அமைய குறித்த காலத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ள அதேநேரம், 52 அரசாங்க நிறுவனங்கள் ஈட்டிய மொத்த இலாபம் 428 பில்லியன் ரூபா என்றும் தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டில் அரசாங்க நிறுவனங்கள் அடைந்துள்ள மொத்த இலாபம் 774 பில்லியன் ரூபா என்பதும் இங்கு வெளிப்பட்டது.

அதேநேரம், தம்புள்ளை பிரதேசத்தில் 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாதுள்ள மரக்கறிகள் மற்றும் பழங்களை சேமிப்பதற்கான குளிரூட்டப்பட்ட விவசாயக் களஞ்சியம் (Agriculture warehouse) தொடர்பில் குழுவின் தலைவர் கவனம் செலுத்தினார். 

அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், குளிர்சாதனப் பெட்டிகள் வாங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் தாமதமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்தியாவின் மானியத்துடன் கட்டப்பட்ட இந்த இடத்தை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்யாமல் இருப்பது மிகப்பெரிய அநீதியென்றும், இதனைக் கையளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். 

மேலும், கொழும்பு தேசிய கலாபவனம் 5 வருடங்களாக மூடப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன் புனரமைப்பு பணிகளுக்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திறப்பு விழா தாமதமாகியுள்ளதாகவும் தெரியவந்தது. இந்தப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு வழங்குமாறு குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அரசாங்க கடன் முகாமைத்துவம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. கடன் முகாமைத்துவத்திற்கு தனியான சட்டமொன்றை நிறைவேற்றியிருக்கும் பின்னணியில், அதன் விதிகளை நடைமுறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இதற்காக நிபுணத்துவ திறன்களைக் கொண்ட அதிகாரிகளின் சேவையைப் பெற வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில், பிரதியமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, அக்ரம் இல்யாஸ், நிமல் பளிஹேன, விஜேசிறி பஸ்நாயக, திலின சமரக்கோன், (சட்டத்தரனி) லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment