தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பட்ஜட் (2025) நாளை (17) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவால் காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத்திட்ட விவாதம் நாளை மறுதினம் (18) முதல் மார்ச் (21) வரை இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளனர்.
அரசாங்க ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வை வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. எனினும், இது எந்தளவு அதிகரிப்பாக அமையும் என்பதை அரசாங்க ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அதேவேளை, வரி அதிகரிப்பு மற்றும் வரிக் குறைப்பு போன்றவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவை எவ்வாறு அமையும் என குறிப்பாக வர்த்தகத்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அத்துடன் வடக்கு,கிழக்கு, மலையகம் என தேர்தலில் மாபெரும் வெற்றியை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்த மக்கள்,தமது பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படப் போகின்றன என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்ற சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, பெருந்தோட்டத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு எவ்வாறான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் இந்த வரவு செலவுத் திட்டம் பெரும் எதிர்பார்ப்பினை தோற்றுவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஜனவரி 09ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு 18 முதல் 25ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு சபையில் நடைபெறவுள்ளன.
அதற்கிணங்க எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம்திகதி மாலை 6 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நான்கு சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.
இதையடுத்து இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வரவுசெலவுத்திட்டக் காலப்பகுதியில் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை 5 வாய்மூல விடைக்கான வினாக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 10.00 மணி முதல் மாலை 6 மணி வரை வரவுசெலவுத்திட்ட விவாதமும் இடம்பெறும்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment