இலங்கையில் மதுசார பாவனை, புகைத்தலினால் ஆண்டுதோறும் 15,000 உயிரிழப்புகள் : அரசாங்கத்துக்கு அதிக வரிப் பணம் கிடைப்பதாக சமூகமயமாக்கப்பட்டுள்ள கருத்து பொய் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2025

இலங்கையில் மதுசார பாவனை, புகைத்தலினால் ஆண்டுதோறும் 15,000 உயிரிழப்புகள் : அரசாங்கத்துக்கு அதிக வரிப் பணம் கிடைப்பதாக சமூகமயமாக்கப்பட்டுள்ள கருத்து பொய்

தொற்றா நோய்கள் ஏற்பட மதுசார பாவனை மற்றும் புகை பிடித்தலும் காரணிகளாக இணங்காணப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் மரணங்கள் உலகளவில் ஏற்படுகின்றன. வருடாந்தம் ஏற்படும் இறப்புக்களில் 4.7 வீத இறப்புக்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றன. இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,000 மரணங்கள் மதுசார பாவனை மற்றும் புகைத்தலினால் ஏற்படுகின்றன என மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் (ADIC) தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் மேலும் குறிப்பிடுகையில், தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான நான்கு முதன்மை காரணிகளுள் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் ஆகியன இரு முதன்மைக் காரணிகளாக இணங்காணப்பட்டுள்ளன. இதனால் வருடாந்தம் சர்வதேச ரீதியாக 2.6 மில்லியன் மரணங்கள் ஏற்படுகின்றன. வருடாந்தம் ஏற்படும் இறப்புக்களில் 4.7 வீதமான இறப்புக்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றன.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 15000 அகால மரணங்கள் ஏற்படுகின்றன. மேலும், மதுசார பாவனையினால் பல்வேறு சமூக சீர்கேடுகள் ஏற்படுவதோடு, மதுசார பாவனை மற்றும் புகைத்தலை காரணமாகக் கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மதுசார பாவனையினால் பல குடும்பங்கள் பாரிய பொருளாதார இன்னல்களுக்கு ஆளாகின்றன.

2022ஆம் ஆண்டு கணக்கெடுப்புக்களின் படி, மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைக்காக தினமும் 1210 மில்லியன் ரூபாவை எமது நாட்டு மக்கள் செலவழிக்கின்றமை தெரிய வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு தரவுகளின்படி, நாட்டுக்கு கிடைக்கப் பெறும் மொத்த வரி வருமானத்தில் மதுசாரம் மற்றும் சிகரட் நிறுவனம் செலுத்தும் வரிப் பணமானது 10 வீதமான பங்களிப்பை மாத்திரமே வழங்குகிறது. ஏனைய 90 வீதமான பங்களிப்பு ஏனைய வருமானங்களிலிருந்தே பெறப்படுகிறது.

10 வீதமான வரிப் பங்களிப்பை மதுசாரம், சிகரட் நிறுவனங்கள் வழங்கினால் இவற்றை பாவனை செய்வதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் வரிப் பணத்தை விடவும் அதிகமான தொகை செலவிட நேரிட்டுள்ளது.

குறிப்பாக மதுசார பாவனையினால் ஏற்படும் பொருளாதாரம் மற்றும் சுகாதார செலவீனங்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 237 பில்லியன் ரூபா லெவழித்திருக்கிறது.

ஆனால், அதே ஆண்டு மதுசாரத்தினால் கிடைக்கப் பெற்ற வரி வருமானம் அச்செலவீனத்தை விடவும் குறைவான தொகை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே, மதுசாரத்தினால் அரசாங்கத்துக்கு அதிகளவு வரிப் பணம் கிடைக்கிறது என்கின்ற சமூகமயமாக்கப்பட்டுள்ள கருத்து ஒரு பொய்யான கருத்து என்பதை நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
மதுசார பிரச்சினையிலிருந்து விடுதலையாவதற்கு நாட்டினுள் ஏற்பட வேண்டிய மாற்றங்கள்

01. விஞ்ஞான ரீதியான வரி சூத்திரத்தை அமுல்படுத்துவதன் மூலம் மதுசார பாவனையைக் குறைத்துக் கொள்ளவும் கலால் வரியை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

02. மதுசார நிறுவனங்களால் செலுத்தப்படாமலிருக்கும் வரிப் பணத்தை அறவிடுதல்.

- கடந்த 2023ஆம் ஆண்டு மதுசாரத்துக்கான வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக மதுசாரத்தினால் கிடைக்கப் பெற்ற வரி வருமானம் 11.6 வீதத்தால் அதிகரித்ததோடு மதுசார பாவனை 8.3 மில்லியன் லீற்றர்கள் குறைவடைந்துள்ளது.

03. சுற்றுலாத்துறை எனும் போர்வையிலும் தற்காலிகமாகவும் வழங்கப்படும் மதுசாரசாலை அனுமதிப்பத்திரங்களை அனுமதிக்காதிருத்தல்.

04. 2016ஆம் ஆண்டு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட மதுசாரக் கட்டுப்பாடு தொடர்பான தேசிய கொள்கையை பிரகடனப்படுத்தல்.

05. சட்ட ரீதியற்ற மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தாராளத்தன்மையை குறைப்பதற்கு பிரதேச மட்டங்களில் கொள்கைகளை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பெறுபேறுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கான வழிமுறையை நடைமுறைப்படுத்துதல்.
06. 2019ஆம் ஆண்டு தேசிய மதுசாரம் மற்றும் புகையிலை மீதான அதிகார சபையினால் முன்மொழியப்பட்ட எனினும் பாராளுமன்றத்தினால் இன்னமும் அங்கீகரிக்கப்படாத திருத்தங்களுக்கு உடனடியாக பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுதல்.

- கல்வி நிறுவனங்கள் அல்லது வணக்கஸ்தலங்கள் ஆகியவை அமைந்துள்ள இடங்களிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் புகைப்பொருள் மற்றும் மதுசார விற்பனையை தடை செய்தல்.

- அனைத்து பொது இடங்களையும் புகைத்தல் மற்றும் மதுசார பாவனையிலிருந்து விடுதலையான பிரதேசமாக மாற்றுதல்.

- சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்களை நிறுத்துவதற்கு தேவையான திருத்தங்களை அமுல்படுத்தல்.

- இணையவழி விளம்பரங்களை நிறுத்துதல்.

- தண்டப்பணத் தொகையை அதிகரித்தல் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தக்கூடிய அதிகாரிகளை அதிகரித்தல்.

07. இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை மையப்படுத்தி தொடர்த்தேர்ச்சியாக பயனுள்ள போதைப்பொருள் தடுப்பு செயறறிட்டங்களை அமுல்படுத்தல்.

08. தற்போது மதுசாரம், புகைப்பொருள் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைகளுக்கு ஆளாகியிருப்பவர்களை அவற்றிலிருந்து விடுதலையாக்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை பரவலாக செயற்படுத்தல்.

09. புகையிலை அல்லது மதுசார நிறுவனங்களோடு தொடர்புடைய நபர்களுக்கு அரச நிறுவனங்களில் பதவிகளை வழங்காமலிருத்தல்.

10. 2024ஆம் ஆண்டு போதைப்பொருளை விரைவாக கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பரரிந்துரைகளை அமுல்படுத்துதல்.

இவ்வாறு மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment