இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்கவிற்கு 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற முதல் தர (1st Class) போட்டித் தொடரொன்றில் விளையாடிய ஷானக காயம் எனத் தெரிவித்து மருத்துவ சான்றிதழ் அளித்து போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளார்.
மருத்துவ சான்றிதழில் ஷானக ஓய்வெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டதனால் அவர் விடுவிக்கப்பட்டதோடு, போட்டியின் மீதமுள்ள பகுதியில் பங்கேற்கவில்லை.
இருப்பினும், அதே நாள் மாலையில் துபாய் புறப்பட்டுச் சென்ற அவர் துபாய் கெபிட்டல்ஸ் (Dubai Capitols) அணிக்காக துபாய் லீக் போட்டியில் விளையாடியுள்ளமை தெரியவந்துள்ளது.
இது ஒப்பந்தத்தை மீறிய செயல் என குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் (SLC), இது தொடர்பில் தசுன் ஷானகவிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது தவறை ஒப்புக்கொண்ட ஷானக, ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
உயர்ந்த தொழில்முறை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புத் தரநிலைகளைப் பேண வேண்டும் எனும் இலங்கை கிரிக்கெட்டின் ஒப்பந்தத்தின் பல பிரிவுகளை அவர் மீறியதால் அவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தாம் நேர்மையற்ற நோக்கத்தில் செயற்பட வேண்டுமென முனையவில்லை என்றும், எதிர்காலத்தில் சிறந்த முறையில் செயற்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உறுதியளித்துள்ளார்.
உயர்ந்த நெறிமுறை மற்றும் தொழில்முறை தரநிலைகளைப் பேணுவதில் உறுதியாக உள்ளதோடு, விளையாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment