அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை (06) ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது 100 ஆவது டெஸ்டில் ஆடவுள்ள இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இலங்கை டெஸ்ட் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக செயற்பட்டு வரும் 36 வயதான கருணாரத்ன அண்மைக் காலத்தில் சோபிக்கத் தவறி வரும் நிலையிலேயே ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
கருணாரத்ன கடைசியாக ஆடிய ஏழு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 182 ஓட்டங்களையே பெற்றிருப்பதோடு கடைசியாக கடந்த செப்டெம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலேயே அரைச்சதம் ஒன்றை பெற்றிருந்தார்.
நாளை காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் கடைசி போட்டியாகவும் அமையவுள்ளது.
‘அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் ஆட முடியுமான மூன்று, நான்கு இளம் வீரர்களை கருத்தில்கொண்டு விடைபெறுவதற்கு சரியான நேரமாக இது உள்ளது’ என்று கருணாரத்ன ‘கிரிக்கின்போ’ இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
‘தவிர, எனது கன்னிப் போட்டி இடம்பெற்ற காலியில் இந்தப் போட்டி நடைபெறுவதால் இங்கேயே விடைபெறுவது நன்றாக இருக்கும்’ என்று கூறினார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் தனது ஓய்வு முடிவை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துவிட்டதாகவும் கருணாரத்ன தெரிவித்தார்.
கருணாரத்ன ஓய்வு பெறப்போகும் இதே காலி மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2012 நவம்பரில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடினார். 2014 இல் சிறிது காலம் அவர் அணியில் இடம்பெறாதபோதும் அந்த ஆண்டு முடிவில் அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை பெற்றார். அது தொடக்கம் அவர் 15 சதங்களை பெற்றதோடு அணியில் நிரந்தர இடத்தை உறுதிசெய்து அணித் தலைவராகவும் செயற்பட்டார்.
கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு ஆடி இருக்கும் கருணாரத்ன இலங்கை அணி சார்பில் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற ஆரம்ப வீரராக பதிவானார். இதுவரை அவர் ஆடி இருக்கு 99 டெஸ்ட் போட்டிகளில் 7079 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு அவரது ஓட்ட சராசரி 39.99 ஆகும்.
தனது ஓய்வு டெஸ்ட் போட்டியில் ஆடுவதன் மூலம் அவர் சனத் ஜனசூரிய, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் அஞ்சலோ மத்தியூஸுக்கு அடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் ஏழாவது இலங்கை வீரராக பதிவாகவுள்ளார்.
‘அணியில் கடினமான பணியை செய்து ஆரம்ப வீரராக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது என்பது சவாலான சாதனையாகும். 10,000 டெஸ்ட் ஓட்டங்களை பெற முடியாதது எனக்கு வருத்தமாக உள்ளது. 2017, 2018 மற்றும் 2019 இல் இருந்தவாறு ஆடி வந்திருந்தால் என்னால் அதனை எட்டி இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதன் பின்னர் கொவிட் தாக்கியதை அடுத்து இலங்கை டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆடவில்லை’ என்று கருணரத்ன கூறினார்.
கருணாரத்ன இலங்கை அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் அணித் தலைவராக செயற்பட்டுள்ளார். தனேஷ் சந்திமால் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் 2019 ஆரம்பத்தில் எதிர்பாராத நேரத்தில் தலைமை பொறுப்பை ஏற்ற கருணாரத்ன தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்க அணியை 2–0 என வீழ்த்தி இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றியை தேடிக் கொடுத்தார்.
அதே ஆண்டின் பிற்பகுதியில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண போட்டியிலும் அவர் இலங்கை அணித் தலைவராக செயற்பட்டார். எனினும் ரி20 சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இடம்பெறவில்லை.
தற்போது மெல்பர்னில் வசிப்பவரான கருணாரத்ன ஓய்வுக்கு பின்னர் பயிற்சியாளராக செயற்படுவது குறித்து கவனம் செலுத்தி வருகிறார். ‘நீண்ட காலம் கிரிக்கெட் ஆடியதால் சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றாலும், மீண்டும் கிரிக்கெட்டில் ஈடுபடுவேன்’ என்றார்.
No comments:
Post a Comment