நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அறிக்கையை கைவிட்டுள்ளோம் - சி.வி.கே.சிவஞானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அறிக்கையை கைவிட்டுள்ளோம் - சி.வி.கே.சிவஞானம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடலை தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி உரையாடுவதற்கான உத்தியோகபூர்வமான அழைப்பிதழையும் பெற்றுக் கொண்டுள்ள சி.வி.கே.சிவஞானம் விரைவில் அது குறித்த சாதகமான முடிவினை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நல்லூரில் உள்ள சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்புக்கான தீர்வு விடயத்தல் பாராளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் நாளையதினம் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக எழுத்து மூலமான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எமது கட்சியைப் பொறுத்த வரையில் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் புதியவை அல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எமது கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரனும் பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்கள்.

அந்த விடயம் சம்பந்தமாக மத்திய செயற்குழுவில் உரையாடப்பட்டது. அவர்களது முன்முயற்சிக்கு எதிராக நாங்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை.

மாறாக, எமது கட்சியின் சார்பில் அந்த விடயத்தினை முன்னகர்த்துவதற்காக எழுவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனக்கும், பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்துக்கும் எழுத்து மூலமான கடிதமொன்றை வழங்கியுள்ளார்கள்.

அந்த வகையில் இன்று சத்தியலிங்கம், சிறிதரன், சுமந்திரன் ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அவர்களுன் பேச்சுக்களை நடத்துவதோடு ஏனையவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி எமது முடிவுகளை அறிவிக்கவுள்ளோம்.

2016-2018 வரையிலான காலப்பகுதி ஆட்சியின்போது புதிய அரசியலமைப்புக்காக தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை குறித்து நாம் பேச வேண்டிய தேவையில்லை. அது ஏற்கனவே கைவிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய அரசியலமைப்புக்கான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர்கள் குழுவிற்கு எமது கட்சி சமர்ப்பித்த அரசியலமைப்புக்கான வரைவு உள்ளது.

அந்த வரைவினையும் இணைத்து, கஜேந்திரகுமாரின் கருத்துக்களையும் இணைத்துக்கொண்டு நாம் சுமூகமானதொரு நிலைப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பினை சாதகமாக பரிசீலிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment