முஸ்லிம்களின் சனத் தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞானபூர்வமானதல்ல - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

முஸ்லிம்களின் சனத் தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞானபூர்வமானதல்ல - ரவூப் ஹக்கீம்

நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொகையை முஸ்லிம்களின் சனத் தொகை விகிதாசாரம் விஞ்சிப்போய்விடும் என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதியான விடயமல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரஞ்சன் கூல் எழுதிய 'உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் - மறைகரம் வெளிப்பட்டபோது' மற்றும் ரவூப் ஹக்கீம் எழுதிய 'நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்-முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்' ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது ஏற்புரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பேர்ட்ரம் ரசல் எனும் தத்துவாசிரியர் 'இந்த உலகம் தீவிரவாதிகளாலும், முட்டாள்களாலும் நிறைந்ததாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தம்மைப் பற்றி மிகத்திடகாத்திரமான உணர்வுடன் இருக்கின்றார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் வாழ்கின்றார்கள்' என்று கூறுகின்றார்.
முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இந்த வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.

சமூகத்தில் தீவிரவாத சிந்தனைகளுடன், முட்டாள்த்தனமான சிந்தனையுடன் இருப்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்களுடைய விடயத்தில் உறுதியாக இருக்கையில் நாங்கள்தான் ஒவ்வொரு விடயத்தினையும் அச்சத்துடன், பீதியுடனும் பார்கின்றோம்.

இந்த மனோநிலையில் இருந்து நாங்கள் மாறவில்லை என்றால் எமது அடுத்த சந்ததியினருக்கான சமூகக் கட்டமைப்பினை அமைப்பதில் நாங்கள் தவறிப்போவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் நடைபெற்ற உலக ஊழல் தினத்தில் ஆற்றிய உரையின்போது, மிகக் காரசாரமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அணுகுமுறையை கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றப்பத்திரிகைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அதுபற்றிய உரையாடல் நெடியது.
எவ்வாறாயினும் சட்டத்தின் ஆட்சி சம்பந்தமான விடயத்தில் இழைக்கப்பட்டுள்ள தவறுகள் திருத்தப்படுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். முஸ்லிம்களாக நாம் தற்பாதுகாப்பு நிலைப்பாட்டை எடுக்கும் காரணத்தினால் பல்வேறு சந்தேகங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதில் தவறியிருக்கின்றோம்.

முஸ்லிம்களின் சனத் தொகை விகிதாசாரம் இந்த நாட்டின் பெரும்பான்மையை விஞ்சிப்போய்விடும் என்றொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமாக உறுதி செய்வதற்காக சனத் தொகை வளர்ச்சி விஞ்ஞானம் சம்பந்தமான பேராசிரியர் திசாநாயக்கவுடன் நீண்ட கலந்துரையாடல்களைச் செய்து அதன் மூலமாகப் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் விடயங்களை முன்வைத்துள்ளேன்.

இந்த விடயங்கள் சமூக மயப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு பெரும்பான்மை மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment