ஆலயங்கள், அவை அமைந்துள்ள நிலங்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர்சுனில் செனவி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

ஆலயங்கள், அவை அமைந்துள்ள நிலங்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் - அமைச்சர்சுனில் செனவி தெரிவிப்பு

ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் ஆகியோர் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிகரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது ரிஷி தொண்டுநாதன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இச்சமயத்தில், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பாடசாலைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களுக்கு அண்மித்துள்ள மது விற்பனை நிலங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், கீரிமலை, பலாலி வீதியை 34 ஆண்டுகளாக மூடிவைத்திருக்கின்ற நிலையில் இன்னமும் அதனை திறந்து விடாதிருப்பதில் நியாமில்லை என்று சுட்டிக்காட்டியவர், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள ஆலயங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அப்பகுதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் கோரினார்.

அவ்வாறு விடுவிக்கப்படாதுள்ள ஆலயங்கள் மற்றும் அவற்றுக்கான நிலங்கள் சம்பந்தமான விபரங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆறுதிருமுருகன் குறிப்பிட்டார்.

அச்சமயத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாண மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வழங்கிய ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன் காரணமாகவே நாம் தேசிய பொங்கல் விழாவை யாழில் முன்னெடுக்கின்றோம். தற்போது நாட்டில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சமூக ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கொழும்பில் வெவ்வேறு காரணங்களுக்காக மூடிவைக்கப்பட்டிருந்த வீதிகள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வடக்கிலும் ஏலவே நாம் முக்கிய வீதியொன்றை திறந்துள்ளோம். ஏனைய வீதிகளும் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்படும்.

ஆலயங்கள் பற்றிய விபரங்களை நீங்கள் ஜனாதிபதியிடத்தில் அனுப்பியுள்ள நிலையில் அதுபற்றிய விபரங்களை நான் அவரிடத்தில் பெற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்கின்றேன்.

பாடசாலைகள் மற்றும் வணக்க தலங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மது விற்பனை நிலையங்கள் சம்பந்தமாக கல்வி அமைச்சுடன் இணைந்ததான செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மாகாணம் சம்பந்தமாகவும் நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.

இதேவேளை, இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ்ப்பாண மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய ஆணை மிகவும் முக்கியமானது. இந்த தருணத்தில் நாம் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றோம்.

அந்த வகையில் வடக்கில் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் அரசியல் நோக்கங்களுக்காக அதிகளவில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளார்கள். அது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

யாழ்ப்பணம் கல்வியில் முன்னிலையில் திகழ்ந்ததொரு மாவட்டமாகும். அதனை மீளவும் ஏற்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment